Saturday, May 31, 2008

சமூகக் கடமை

"அண்ணா.. வாங்கண்ணா.. என்ன சொல்லாமக் கொள்ளாம திடீர்னு?"

"என் பொண்ணு காலேஜ் அட்மிஷன் விஷயமா, ட்ரஷரில வேலை பாக்கற ராஜனைப் பார்க்க வந்தேன். உன் ஆஃபீஸ் பக்கம்தானேன்னு, அப்படியே உன்னையும் பாத்துட்டு போலாமேன்னு வந்தேன்"

"ஸ்ரீராம் எப்படி இருக்கான்?"

"நல்லா இருக்கான் கிருஷ்ணா. அவன்தான் நீ முந்தி மாதிரி நிறைய எழுத ஆரம்பிச்சுட்ட, ஆனா இப்போ வலையுலகத்துல-ன்னு ரெண்டு நாள் முன்னாடி வீட்ல ப்ரொளஸிங் பண்ணிகிட்டு இருக்கறப்ப கூப்ட்டு காமிச்சான்"

"நீங்க பாத்தீங்களாண்ணா.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. மொதல்லயெல்லாம் பத்திரிகைகள்ல என் கதை, கவிதை-ன்னு வர்றப்ப உங்ககிட்டேர்ந்து என்ன விமர்சனம் வரும்னு எதிர்பார்த்துட்டிருப்பேன். என்னென்ன விஷயங்களையெல்லாம் நாம விவாதம் பண்ணியிருப்போம்!. என் blog எப்படி இருந்துச்சுண்ணா?"

"............"

"ஏண்ணா ஒண்ணுமே சொல்ல மாட்டீங்கறீங்க?"

"சங்கடப்படமாட்டியே?"

"சொல்லுங்கண்ணா.."

"நான் உன்கிட்ட எதிர்பார்க்கறது இது இல்லப்பா. நம்மெல்லாம் வேற மாதிரி இருக்கணும்"

"புரியலண்ணா"

"இல்ல கிருஷ்ணா.. சும்மா காமெடியா நாலு மேட்டர் எழுதிப் போடறதுல என்ன சமூக அக்கறை இருக்க முடியும்? நமக்குன்னு சில கடமைகள் இருக்குன்னு நம்பறேன் நான். அதுலயிருந்து தவறக்கூடாதுன்னும் நினைக்கறேன். நம்மளை சுத்தி எவ்வளவு தப்பு விஷயங்கள் நடக்குது? அதையெல்லாம் யாரு தட்டிக் கேக்கறது? அவனுக்கு தானே நடக்குது-ன்னு வேடிக்கை பார்க்கறது என்ன நியாயம்? எல்லாரும் அடுத்தவனை ஏமாத்தறது, பழிவாங்கறது ன்னு உலகம் எவ்ளோ சுயநலமா மாறீட்டு வருது தெரியுமா? இப்படியே போச்சுன்னா அடுத்த தலைமுறைக்கு நாம விட்டுட்டுப் போற செய்தி என்னன்னு நம்ம மனசு உறுத்தாதா? இது சரியா? இதை மாத்தப்போறது யாரு? நமக்கு அந்தப் பொறுப்பு இல்லையா?"

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலண்ணா.. மாத்திக்க முயற்சி பண்றேன். என்னை சுத்தி ஏதாவது தப்பு நடந்தா எழுதறேன்"

"அது உன் இஷ்டம். என் மனசுல பட்டதை சொன்னேன்.. கஷ்டமா நெனைச்சன்னா..."

"ச்சே.. அப்படியெல்லாம் இல்லண்ணா.."

"சரி விடு.. ஐயையோ.. மணி பதினொண்ணு ஆச்சா?"

"என்னது திடீர்னு கிளம்பறீங்க? சாப்பிட ஏதாவது வாங்கீட்டு வரச் சொல்றேண்ணா"

"இல்ல கிருஷ்ணா.. என் பொண்ணு லலிதா காலேஜ் அட்மிஷன் விஷயமா சுத்திகிட்டிருக்கேன். மார்க் கொஞ்சம் கம்மியா வாங்கித் தொலைச்சுட்டா. ஒரே சீட் தான் இருக்குங்கறாங்க. இன்னொரு பையன் இவளைவிட அதிக மார்க்கோட இருக்கான். அவனுக்குத் தான் கிடைக்கும்ங்கறாங்க. கடைசியில யாரு அந்தப் பையன்னு பாத்தா, என் ஆபீஸ் பியூன் கோவிந்தன் பையன்! லலிதாக்கு கிடைக்கலன்னாலும், அந்தப்பையனுக்கு கிடைச்சுட்டா அப்புறம் நான் ஆபீஸ்ல தலை காட்ட முடியாது! ட்ரஷரில வேலை பாக்கற ராஜனுக்கு அந்த காலேஜ் செகரட்டரி மச்சினனாம். மூணு நாளா அலைஞ்சு ராஜனை ‘கரெக்ட்’ பண்ணி வெச்சிருக்கேன். இப்போ ரெண்டு பேருமா செகரட்டரி வீட்டுக்குப் போகணும். நேரமாச்சு. வரட்டா.."

Friday, May 30, 2008

அவியல்-3

நடிகர் ரித்தீஷை ஓரிரண்டு பதிவுகளில் கிண்டலடித்துவிட்டேன். இந்த நிலையில், இந்த வார நக்கீரனில், (பக்கம் 25) ஒரு செய்தி போட்டிருந்தார்கள். கீழக்கரை அருகே ‘கும்பிடுமதுரை’ கிராமத்தை செர்ந்த அகமது-ரஹ்மத் தம்பதியரின் மகன் ஆசிரின் இதய ஆபரேஷனுக்காக ஒன்றரை லட்சம் கொடுத்தனுப்பியிருக்கிறார் ரித்தீஷ். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்றுகூடச் சொல்லலாம். அதன்பிறகு நடந்தவைதான் ரித்தீஷைப் பாராட்ட வைக்கிறது. அந்த ஒன்றரை லட்ச ரூபாயில், பதினைந்தாயிரத்தை மட்டும் அந்தக் குடும்பத்திடம் சேர்த்துவிட்டு ‘யோவான்’ என்கிற கவுன்சிலர் தலைமறைவாகிவிட்டார்-ஸாரி-விட்டான். இதை நக்கீரன் மூலம் படித்து தெரிந்துகொண்ட ரித்தீஷ், ‘நமக்கென்ன’ என்றிருக்காமல் மறுபடி ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை நக்கீரன் அலுவலகத்திற்கு அனுப்பி, அந்தக் குடும்பத்திடம் சேர்த்துவிட்டார்! சபாஷ் ரித்தீஷ்! (ஆனாலும், ‘நாயகன்’ தலைப்புல படம் எடுக்கற உங்க யோசனையை மறுபரிசீலனை செய்யுங்க சார்!)

******************************************************
‘கண்ணும் கண்ணும்’ படத்துல வர்ற ‘பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி’ பாட்டின் இந்த வரிகளும், அதன் மெட்டும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது..

செடி நட்டதும் மலர் மொட்டுகள் விட உத்தரவிடுவோம் விதை இட்டதும் கனி சட்டென வர கட்டளையிடுவோம்-இளம் கன்னியர் இனி வெண்ணிலவினில் கப்பலும் விடுவோம் - எமை முட்டிட வரும் முட்செடிகளை முட்டி முட்டி முன்னேறுவோம்!
*****************************************************
‘தளபதி’ என்கிற வார்த்தைக்கு வாய் இருந்தால் அது கதறி அழுதிருக்கும் என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு எல்லோரும் அதைப்போட்டு கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். இளையதளபதி(விஜய்), புரட்சித்தளபதி(விஷால்), சின்னத்தளபதி(பரத்) அப்புறம் வீரத்தளபதி(ரித்தீஷ்!!!) வேறு என்னென்ன வைக்கலாம் என்று ஐடியா இருந்தால் சொல்லுங்கள்..

என் ஐடியா- வெற்றித்தளபதி, பெரியதளபதி, வெட்டித்தளபதி(அதிகமாக அரிவாள் படங்களில் நடிக்கும் நடிப்பவர்), புதுமைத்தளபதி, இனிய தளபதி, இளமைத் தளபதி கடைசியாக யாராவது ‘கடைசி தளபதி’ என்றும் போட்டுக் கொண்டால் தேவலாம்.. ஏனென்றால் அதற்குப் பிறகாவது யாரும் போட்டுக் கொள்ளாமலிருப்பார்களா என்று பார்க்கலாம்!

******************************************************************
கொஞ்சம் பிசியாகி விடுவேன் என நினைக்கிறேன்.. டெய்லி ஒரு பதிவு போடுவதை விட்டு, இரண்டு, மூன்று என்று போட்டு பெரிய இவன் மாதிரி காட்டிக்கொண்டாயிற்று! இனி இப்படி எழுத முடியுமா என்று தெரிய வில்லை. (மேட்டர் இல்லன்னா இப்படியா சொல்றது-ன்னு நினைக்காதீங்க! நிஜமாவே சிஸ்டம் பக்கம் வர முடியாத அளவுக்கு வேற வேலைகள் கொஞ்ச நாளைக்கு!) பார்க்கலாம்.... ரொம்ப சந்தோஷப்பட்டுக்காதீங்க!

Thursday, May 29, 2008

கி.பி.2013



என்னோட அவியல் பதிவுக்கு கயல்விழி முத்துலட்சுமி ஒரு பின்னூட்டம் போட்டிருந்தாங்க. "ஆனா கொஞ்ச நாள் கழிச்சு பெண்கள் ரொம்ப குறைவா இருக்கறதால.. பணம் குடுத்து கல்யாணம் பண்ணிப்பாங்கனு சொல்றாங்களே.. அப்படியா.. வருமா அந்த காலம்..வந்தா எவ்வளவு வரதட்சனை கேக்கலாம்ன்னு யோசிச்சுவைங்க.. :- ன்னு. படிச்சுட்டு எனக்கு ஆச்சரியமா இருந்தது! ஏன்னா, அவங்க எழுதின கருத்தை வெச்சு 1993-ல (15 வருஷம் முன்னாடி!) நான் குமுதத்துல ஒரு, ஒருபக்கக்கதை எழுதிருந்தேன். (அப்போ அரசு தொட்டில் திட்டம் வந்த நேரம்ன்னு நினைக்கறேன்) என்னா ஒரு ஒற்றுமை பாருங்க! உங்க தலைஎழுத்து, இப்போ அந்தக் கதைய நீங்க படிக்கப் போறீங்க! (கயல்விழி மேடத்த திட்டாதீங்க!)
-------------------------------------------------
கி.பி. 2013

"முடிவா என்ன சொல்றீங்க?"

"ரெண்டு லட்சம் ரூபா கேஷ், இருபத்தஞ்சு பவுன் தங்கம், என் மூணாவது பொண்ணு எழுதப் படிக்க ஒரு கம்ப்யூட்டர் இதெல்லாம் இருந்தா மேற்கொண்டு சம்பந்தம் பேசலாம்" பெண்ணின் தாயார் உறுதியாய் சொல்ல, என் மனைவி என்னை முறைத்தாள். அதன் அர்த்தம் புரிந்த நான் தலை கவிழ்ந்து கொண்டேன்.

"சரி' என்று என் மனைவி சம்மதித்துவிட பிரிண்ட் செய்யப்பட்ட பேப்பர்கள் பரஸ்பரம் கையெழுத்திட்டு மாற்றிக்கொள்ளப்பட்டது.
*****************************************************
"பார்த்தீங்களா.. அவ என்னெவெல்லாம் கேக்கறான்னு? இருபது வருஷம் முந்தி ரெட்டைக் குழந்தை பொறந்தப்ப-வரதட்சிணைக்கு பயந்து-பெண் குழந்தையை அரசு தொட்டில்ல விட்டீங்க. இப்ப என்னடான்னா மாப்பிள்ளை வரதட்சிணை கொடுக்க வேண்டியதா இருக்கு!"

என் மனைவி என்னைத் திட்டத்தொடங்க, நான் இருபது வருஷத்துக்கு முன் மனைவியை கணவன் திட்டிக் கொண்டிருந்த பொற்காலத்தை நினைத்தவாறே கொதிக்கும் சாம்பாரை இறக்க சமையலறைக்குள் புகுந்தேன்.

காதலிக்கும் ஆசையில்லை

"ஏண்டா கேசவ், திவ்யாவைப் பிடிக்கலைங்கற?" - ராகவன் கேட்டான். தூரத்தில் அலைகளை துரத்தி விளையாடும் குழந்தைகளும், கால் நனைத்து விளையாடும் இளைஞிகளுமாய் பிஸியாக இருந்தது மெரினா.

"பிடிக்கலன்னு சொல்லலைடா. லவ் பண்ற எண்ணத்தோட பழகலைடா நான்" மறுத்தான் கேசவ். "நானே எங்கப்பா சொல்லி வேலை தேடறதுக்காக அவரு ஃபிரண்ட் ராஜன் அங்கிள் வீட்டுல இவ்ளோ நாள் தங்கியிருக்கேன். இப்போ எனக்கு வேலை கிடைச்சு ட்ரெய்னியா ஆறு மாசம் பெங்களூர் போகப்போறேன்.. நாளைக்கு காலைல கிளம்பிடுவேன். அந்த நேரத்துல, இப்படி, வந்த இடத்துல பொண்ணை மயக்கீட்டான்-ன்னு கெட்ட பேரோட போகணுமா.. அதுவுமில்லாம நான் திவ்யா கூட நல்ல ஃபிரண்டாதான் பழகீட்டிருந்தேன். நான் இங்க இருந்த ஆறு மாசம் அவங்கப்பா எத்தனை தடவை திவ்யாவை என்கூட தனியா அனுப்பியிக்காருன்னு தெரியுமா? எப்படி அவளுக்கு இப்படி ஒரு எண்ணம் வந்ததுன்னே தெரியல"

"அதெப்படி அவ்ளோ கரெக்டா அவ உன்னை லவ் பண்றான்னு கண்டுபிடிச்ச?"

"இன்னைக்கு காலைல ட்ரெய்ன் டிக்கெட் ரிசர்வ் பண்றதுக்காக வெளில கிளம்பினேன்ல.. அப்போ போர்ட்டிகோவுல நின்னு திவ்யா அவ ஃபிரண்ட் தீபாகிட்ட பேசிகிட்டிருந்தத கேட்டுட்டேன். என் பேர் வந்ததால நின்னு கேட்டேன். தீபாவை எனக்கும் தெரியும்.. திவ்யாகூட காலேஜ்ல படிக்கறா. அவளோட நல்ல ஃபிரண்ட்"

"என்ன சொல்லீட்டிருந்தா?"

"கேசவ் நாளைக்குப் போவாரு போல.. அதுக்குள்ள நான் அவர லவ் பண்றத சொல்லிடுவேன்-ன்னு சொல்லீட்டிருந்தா"

"இப்போ சாயந்தரம் ஆச்சுல்ல. சொல்றவளாயிருந்தா இந்நேரம் உனக்கு ஃபோன் பண்ணியிருப்பாள்ல?"

"இல்லடா.. அதையும் சொல்லீட்டிருந்தா. நேர்ல சொல்றதுக்கு தயக்கமா இருக்கு. இன்னைக்கு நைட்டுக்குள்ள எப்படியாவது அவருக்கு தெரியப்படுத்தீடுவேன்னா"

"சரிடா.. அதுக்காக இப்படி காலைலேர்ந்து வெளியிலயே சுத்திகிட்டிருந்தா என்ன அர்த்தம்? போ.. எல்லாத்தையும் பேக் பண்ணி வெச்சாத்தானே காலைல கிளம்ப முடியும்?"

"ப்ச்.. என்ன பண்றதுன்னே தெரியலடா. நல்ல பொண்ணுடா அவ. இப்படி ஒரு பிரண்டை மிஸ் பண்ண முடியாது என்னால.. சரி.. எதுவாயிருந்தாலும் நான்தானே போய் ஃபேஸ் பண்ணணும். ஓ.கே. வரேண்டா" ராகவனிடம் விடைபெற்று புறப்பட்டான் கேசவ்.
********************************
ராஜன் அங்கிள் வீட்டை கேசவ் அடைந்தபோது மணி எட்டைத் தொட்டிருந்தது.

"என்னடா இது.. நாளையோட போற.. கொஞ்சம் முன்னாடி வந்து எங்ககூட இருக்காம இவ்ளோ லேட்டா வர்ற?"-வாசலிலேயே நிறுத்தி கேள்வி கேட்ட திவ்யாவின் அம்மாவிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அம்மாவின் குரலால் கேசவ் வந்து விட்டதை உணர்ந்து உள்ளேயிருந்து திவ்யா வந்து எட்டிப்பார்த்த போது இவனால் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.

"இன்னைக்கு சாப்பிட வெளில போயிடாத. அவரு இப்போ வந்துடுவாரு. உன்னை வெயிட் பண்ணச்சொன்னாரு. எல்லாரும் ஒண்ணா சாப்பிடலாம்"

கேசவ் தர்மசங்கடமாய் உணர்ந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் "சரிம்மா.. போய் முகம் கழுவீட்டு வந்துடறேன்" சொல்லிவிட்டு மாடியிலிருக்கும் தனது அறை நோக்கிப் போனான். படிகள் ஏறி, அறைக் கதவைத் திறக்கும் வரை திவ்யா தன்னை பார்த்துக் கொண்டிருக்கிறாளென்பதை முதுகில் உணர்ந்தான்.

அறையைத்திறந்தபோது கீழே கிடந்த கவரைப் பார்த்தவனுக்கு அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததன் அர்த்தம் தெரிந்தது. ஒருவித தயக்கத்துடனே கவரைப் பிரித்தான்.

‘வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள ஆசை..
ஏற்றுக்கொள்வீர்களா?’ என்று இரண்டே வரிகள் கம்பியூட்டர் எழுத்துகளில் இருக்க கீழே ‘காதலுடன் உங்கள் D’ என்றிருந்தது. D மட்டும் அழகாக word art -ல் டைப் செய்யப்பட்டிருந்தது. கேசவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அப்படியே படுக்கையில் அமர்ந்தான்.

அரை மணி நேரத்திற்குப்பின் அறைக்கு வெளியே திவ்யாவின் குரல் கேட்டு சட்டென எழுந்தான்.

"கேசவ்.. அப்பா வந்துட்டாரு. சாப்பிடக் கூப்பிடறாரு"-எப்போதும் இயல்பாகப் பேசும் அவள் முகம் பார்க்காமல் சொல்லிவிட்டுப் போனாள்.

சாப்பிடும்போது திவ்யா வழக்கத்திற்கு மாறாக இருந்ததை ராஜன் அங்கிள் கவனித்துக் கேட்டார்.

"என்னன்னே தெரியலீங்க.. சாயந்திரம் தீபாகூட வந்து- ரொம்ப நேரம் ரெண்டு பேரும் டிஸ்கஷன் வேற.."

"ஒண்ணுமில்ல.. கேசவ் நாளைக்குப் போறான்ல.. அந்த சங்கடமா இருக்கும்" விகல்பமில்லாமல் சொல்லிவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த ராஜன் அங்கிளைப் பார்க்கவே முடியவில்லை அவனுக்கு.

திடீரென்று ஏதோ யோசனை வந்தவனாய் "திவ்யா.. காலைல ஏழேகால் பிருந்தாவன்ல போறேன். என்னை உன் ஸ்கூட்டில ரயில்வே ஸ்டேஷன்ல ட்ராப் பண்ணுவல்ல?" என்று கேட்டான். அவள் முகத்தில் சந்தோஷம் படர்வதையும் உணர்ந்தான்.

"ஏழு மணிக்கு எந்திரிக்கறதுக்கு பதிலா.. ஆறு மணிக்கு முன்னாடியே எழுந்துருக்கணும். ஒரு நாள்தானே... அதெல்லாம் பண்ணுவா.." என்று கிண்டலடித்தார் அங்கிள்.
************************************************
எப்போதும் ஐம்பதுக்கு மேலே ஓடும் ஸ்கூட்டியின் ஸ்பீடாமீட்டர் முப்பதையே தொடவில்லை. ரயில்வே ஸ்டேஷனை அடையும் வரை இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

"திவ்யா உனக்கு பிளாட்பாரம் டிக்கெட் வாங்கிக்க. நான் ஒரு வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வரேன்" சொல்லிவிட்டு கேஷுவலாக முன் சென்றான். வாட்டர் பாட்டில் வாங்கிவிட்டு திரும்பியபோது அவள் தயாராக நின்றிருந்தாள்.

"போலாமா?" கேட்டபடியே உடன் நடந்தான். பிளாட்பாரத்தை அடைந்து லக்கேஜை வைத்துவிட்டு
"உட்கார் திவ்யா.. இன்னும் அரை மணி நேரம் இருக்கு" என்றான்.

திவ்யா உட்கார்ந்தாள். பதட்டமாய் இருந்தாள்.

"ஏன் திவ்யா என்னமோ மாதிரி இருக்க?" என்று கேட்டான். அவளுக்கு குழப்பமாக இருந்தது. நான் அறையில் போட்ட கவர் கேசவுக்கு கிடைக்கவில்லையோ?

'இ..இல்ல.."

'சரி.. நான் ஒண்ணு சொல்றேன். டென்ஷன் ஆகிடாத.."

"எ..என்ன கேசவ்"

"உன் பிரண்ட் தீபா பண்ணின வேலை தெரியுமா? இங்க பாரு" என்றபடி அந்தக் கவரை எடுத்துக் கொடுத்தான். தீபாவா.. இது நான் எழுதினது கேசவ் என்று கத்த வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

"கேசவ் நீ தப்பா புரிஞ்சிட்டிருக்க" என்று எதுவோ சொல்ல வந்தவளை இடைமறித்தான். "இல்லல்ல திவ்யா.. உன்னை நான் தப்பாவே நினைக்கல. நீ ஒரு நல்ல பிரண்ட்-டா, இன்னும் சொல்லப்போனா கூடப் பொறக்காத பிரதரா என்னை நினைக்கறது அவளுக்கும் தெரியும்தானே.. அதுனால உனக்குத் தெரியாமத்தான் அவ இதப் பண்ணியிருக்கணும். சோ, உன்னை நான் தப்பு சொல்லல"

வாயடைத்துப்போனது திவ்யாவுக்கு. அவனை நேருக்கு நேர் பார்த்து "சாரிடா கேசவ்" என்றாள்.

"நீ என்ன பண்ணுவ திவ்யா? அவகிட்டையும் இதப் பத்தி நான் பேச மாட்டேன். நீயா சொல்லிடு. என்ன? அவளையும் நான் நல்ல பிரண்டாத்தான் நினைக்கறேன். சரியா?" என்றான்.

தூரத்தில் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்ஸின் சத்தம் கேட்க, லக்கேஜை எடுத்தவனைத் தடுத்தாள். "நீ போய் உட்காருடா. ஒண்ணை நான் எடுத்துட்டு வரேன்"

அவள் முகம் தெளிவாக இருந்ததை கண்டு சந்தோஷமாக இருந்தது அவனுக்கு!

அவியல்-2

விஜய் டி.வி. ‘கலக்கப் போவது யாரு’ காமெடியில் கலக்கிக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம். அதில் பங்கேற்பவர்கள் காமெடி பண்ணுவது போதாதென்று, நிகழ்ச்சி நடத்துபவர்களும் காமெடி பண்ணி நம்மை விலாநோக வைக்கிறார்கள். பின்ன என்னங்க, போன வாரம் அரையிறுதிக்கு நம்ம ‘வீரத்தளபதி’ ரித்தீஷ் நடுவராக வந்த சோகம் இன்னும் தீராத நிலையில், இந்த வார வைல்டு கார்டு ரவுண்டின் நடுவர் என்று ஒருவரின் பெயரைப் போட்டிருந்தார்கள் குமுதத்தில். படித்துவிட்டு புத்தகத்தை மூடிவிட்டேன்! இயக்குனர் பிரவீண் காந்த்! (உங்களையெல்லாம் பாத்தா எனக்கு சிப்பு, சிப்பா வர்து!)
------------------------------------------------------------------------------
நேற்று நண்பர் ஒருவரை சந்திக்க பைக்கில் சென்றேன். அவர் வருவதாய் சொன்ன இடத்தில் பைக்கை நிறுத்தியபடியே செல்போனை எடுத்து, (ஹியர்ஃபோன் இணைத்திருந்தேன்) நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். வண்டியை சைடு ஸ்டேண்ட் போடும்போது அருகிலே வந்தார் ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள்.

‘என்ன சார்.. வண்டி ஓட்டீட்டே போன் பேசுறீங்க?’

‘இல்லியே சார்.. நான் வண்டியை நிறுத்தீட்டுதான் பேசறேன்’

‘வண்டிய நிறுத்தீட்டு பேசறவரு எதுக்கு ஹியர்ஃபோன் வெச்சிருக்கீங்க?’

இன்னைக்கு இவருக்கு நினைச்ச வசூல் ஆகல போல’ என்று நினைத்தவாறே பேசி சமாளித்து அனுப்பினேன்.

எனக்கு எப்போதோ படித்த ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது.

இங்கிலாந்தில் (யாரு கேக்கப் போறாங்க நம்மள? ஏதோ ஒரு ஊரைச் சொல்ல வேண்டியதுதான்!) ஒருமுறை வெடிகுண்டு வைத்திருந்ததாய் ஒரு நபர் கைதானார். எங்காவது அவர் வைத்து வெடித்திருந்தால் எத்தனை சேதமாகியிருக்கும் என்று போலீஸ் வழக்குப் போட்டது. அந்த நபரின் வழக்கறிஞர் கையும் குண்டுமாய் அந்த நபர் பிடிபட்டதால், தண்டனையை மட்டுமே குறைக்க வாய்ப்பிருப்பதாய் நம்பி, ஒரு வாதத்தை வைத்தார். ‘குண்டு வைத்திருந்தது உண்மை. அவர் அதை வெடிக்க வைக்க அல்லாமல், அழிப்பதற்காக எங்கோ கொண்டு சென்றிருக்கவும் வாய்ப்புள்ளதல்லவா?’ என்று. இந்த வாதத்திற்கு வலு சேர்க்க அவர் ஒரு விஷயம் சொன்னார். ‘வீதியில் எத்தனையோ பெண்கள் நடமாடிக்கொண்டிருக்க, வேறு பல ஆண்களும் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். அத்தனை ஆண்களிடமும், பெண்களை கற்பழிக்கக் கூடிய ஒரு உறுப்பு இருந்துகொண்டுதானிருக்கிறது. எல்லாரையும் சந்தேகப்பட்டு கைது செய்வீர்களா?’ அவரின் இந்த வாதத்தால் அந்த நபரை விடுதலையே செய்து விட்டார்களாம்!

இந்தக் கதையைச் சொல்லி, ‘அதேமாதிரி ஹியர்ஃபோன் இருந்தாலே பேசீட்டுதான் வண்டி ஓட்டுவேன்னு அர்த்தமா?’ என்று அந்த கான்ஸ்டபிளிடம் கேட்க ஆசைதான். என்னிடம் வெறும் நாற்பது ரூபாய்தான் இருந்தது. இப்போதெல்லாம் பிச்சைக்காரர்கள் ஒரு ரூபாய்க்கு கம்மியாகவும், போலீஸ்காரர்கள் நூறு ரூபாய்க்கு கம்மியாகவும் வாங்குவதில்லை என்று கேள்விப்பட்டதால் மூடிக்கொண்டு இருந்துவிட்டேன்.
--------------------------------------------------------------------------
"சார்.. Blog எல்லம் ஆரம்பிச்சு கலக்கறீங்களே"

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைப்பா"

"போங்க சார்.. இவ்ளோ திறமைய எங்க வெச்சிருந்தீங்க இவ்ளோ நாள்?"

"அது எங்கிட்டயேதான் இருந்தது. அத விடு.. எழுதியிருந்ததுல உனக்கு எது புடிச்சது?"

"ஹி..ஹி.. இன்னும் நான் பாக்கல சார்"

"பாக்கலியா? அப்பறம் என்னமோ திறமை கிறமைன்ன?"

"இல்ல.. உங்க தம்பிகிட்ட நேத்து பேசிட்டிருந்தேன்.. அவரு தான் சொன்னார்"

"தம்பிக்கு எதுக்கு கூப்பிட்ட?"

"நமக்கு தெரிஞ்ச பொண்ணு ஒண்ணு இருக்கு. கம்பியூட்டரெல்லாம் தெரியும். நீங்கதான் எம்.டி.க்கு வலது கை ஆச்சே.. எப்படியாவது உங்க கம்பெனில சேத்து விட சொல்லி உங்க தம்பிட்ட பேசினேன்.. அப்பத்தான்.."

போடாங்.....
--------------------------------------------------------------------------------

Wednesday, May 28, 2008

இவன் இப்படித்தான்

எப்போதாவது
தெருவில் கிடக்கும்
கல்லெடுத்து
ஓரத்தில் எறிந்ததுண்டா?
விலாசம் கேட்டவருக்கு
வீடு வரை சென்று
வழிகாட்டியதுண்டா?
பர்சை தவறவிட்டதாய்
சொன்ன இளைஞருக்கு
பொய்யெனத் தெரிந்தும்
காசு கொடுத்ததுண்டா?
ஏக்கமாய் உன்னைப் பார்க்கும்
புத்தக மூட்டை சுமந்த
பள்ளிச் சிறுவனை
ஏற்றிச் சென்றதுண்டா?
எல்லாம் செய்துவிட்டு
`எதிர்பார்ப்பின்றி' என்று
சொல்லிக்கொண்டதுண்டா?

நானும்தான்..

ஆனால் நிச்சயம்
எதிர்பார்ப்பின்றி அல்ல
என் டைரியில் குறித்துக்கொள்ள..
யாரேனும் பாராட்ட..
கடைசியில்
இப்படியொரு கவிதை படைக்க

அவியல்

இந்த கிரிக்கெட்டை பாக்கறத விட்டுத்தொலைக்கணும் முதல்ல.. வெறும் 146 ரன் எடுக்க, ஏழு விக்கெட்டை வெச்சுட்டு நம்ம சென்னை கிங்க்ஸ் கடைசி ஓவர் வரைக்கும் டென்ஷன ஏத்துறாங்கப்பா! எப்படியோ ஜெயிச்சுட்டாங்க.. அத விடுங்க.. மேட்ச் முடிஞ்சதும் கில்கிறிஸ்ட் வெறுத்துப் போய் உட்கார்ந்து கிளவுஸை கழட்டீட்டு இருந்ததை பார்க்கப் பாவமா இருந்தது! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் கில்லி!
----------------------------------------------------
இது உண்மையா என்று தெரியவில்லை. அனிமல் சைக்காலஜியின் படி நாய்க்கு நாம் உணவு வைக்கும் போது ‘நமக்கு வந்து இவ்ளோ பெரிய மனுஷன் சாப்பாடு வைக்கிறாரே’ன்ன்னு வாலாட்டுமாம். அதே பூனை, ‘இவ்ளோ பெரிய மனுஷன் வந்து நமக்கு சாப்பாடு வைக்கிறான்னா, நான் எவ்ளோ பெரிய ஆளு’ன்னு நெனச்சுக்குமாம். அப்டீங்களா?
----------------------------------------------------
நாட்டியப் பேரொளி பத்மினி மறைந்தபோது வந்த ஒரு எஸ்.எம்.எஸ்:
‘ஆடிய போது அசையாமல் பார்த்தோம்..
அசையாமலிருந்தபோது ஆடிப்போனோம்’
-----------------------------------------------------
ரெண்டு பெண் குழந்தைகள் இருப்பது என்னவோ பெரிய பாரம் போல, பலரும் ஒரே அட்வைஸ் மழைதான்! நானும் பாரதியாரிலிருந்து ஆரம்பித்து ரெண்டும் பெண்ணாய்ப் பிறக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பேன். உடனே `பேச்சுக்கு சரி, சோத்துக்கு?' என்பார்கள். நானும் விடாமல் கமலஹாசன், ரஜினிகாந்த் என்று உதாரணங்கள் சொல்வேன். நேற்று இப்படித்தான் இந்த வலைப்பூ பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஒரு பெருசு வந்து இதுக்கு காசு ஏதாவது செலவாகுமா?’ என்று கேட்டார். அதெல்லாமில்லை என்று சொன்ன போது ‘பாத்துப்பா.. ரெண்டு பொட்டப்புள்ள இருக்கு.. நீதான் கரையேத்தணும்’ என்றார். ‘நான்தான் கரையேத்தணும். அதனாலதானே பரிசல்காரன்’ன்னு பேர் வெச்சிருக்கேன்’ என்றேன் நான்.

Tuesday, May 27, 2008

இவனையெல்லாம் எதைக்கொண்டு அடிக்க?

இந்தப் பதிவப் படிச்சு, உங்களுக்கு ஏதாச்சும் ஆயிடுச்சுன்னா, நம்மளைக் குத்தம் சொல்லாதீங்க! என் ‘பிரதர்’ சுப்பிரமணிதான் நான் ரொம்ப வருஷத்துக்கு முன்னால ‘உங்கள் ஜூனியர்’ மாத இதழ்ல ‘எடிட்டரா? எறும்பா?’-ங்கற தலைப்புல எழுதியிருந்த இந்தப் படைப்பை (ஏண்டா, என்னா தெகிரியம் இருந்துச்சுன்னா, இதையெல்லாம் ‘படைப்பு’ ன்னு சொல்லுவ?) கொண்டு வந்து கொடுத்து, Blog-ல போடுங்கன்னான்.. இதையெல்லாம் ஒருத்தன் பத்ததிரமா வெச்சுட்டிருந்திருக்கான் பாரு.. அவனச் சொல்லணும்!
------------------------------------------------------------------------------------------------

[பரபரப்பான விஷயங்களையே எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நிருபரின் பார்வையில் சாதாரண நிகழ்ச்சி பரபரப்பாய்ப் பட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்த போது..]


நமது இதழான ‘வெங்காய தேச’த்தின் ஆசிரியர் வெள்ளைப்பூண்டு வாசுதேவன் என்பதும், அவர் ஓர் அரைக்கிறுக்கு என்பதும் அறிந்ததே. சமீப காலமாக ஆளுங்கட்சியினர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி நமது இதழில் அவர் எழுதுவதும் அறிந்ததே. இதனால் கோபம் கொண்ட ஆளுங்கட்சியினர் ஆசிரியர் மீது எறும்பை ஏவி கடிக்க வைத்தது மட்டும் அறியாததே. அந்த சொரசொரப்பான... ஸாரி.. பரபரப்பான சம்பவம் பின்வருமாறு:

ஆசிரியரின் துணிச்சல்


ஆளுங்கட்சியினரின் தவறுகள் யாராலும் கண்டு கொள்ளப்படாமலிருந்த போது துணிந்து எழுதிய ஒரே இதழ் நமது இதழ். முதல்வர் ‘பாவக்காய் பாலகுருநாதன்’ செய்யும் கொலை, கொள்ளை, ஊழல்கள் என்று சாதாரண சம்பவங்களையே மற்ற பத்திரிகைகள் வெளியிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் நமது ஆசிரியர் வெ.பூ.வாசுதேவன் மட்டுமே அவரது வண்டாவாளங்களை தண்டவாளத்திலேற்றினார். போன மாத இதழில் நமது ஆசிரியர் எழுதிய ‘முதல்வர் ஒரே சட்டை வேட்டியை இரண்டு நாட்களாகப் போட்டுக்கொண்ட மர்மம் என்ன?" - கட்டுரையைக் கண்டே முதல்வர் கதி கலங்கியுள்ளார். மேலும் வியாழனன்று நடந்த மாநாட்டில் முதல்வர் சட்டையின் மூன்றாவது பட்டனை, நான்காவது பட்டனுக்குரிய துளையில் தவறாகப் பொருத்திய போது-நமது புகைப்படக்காரர் ‘வெண்டைக்காய் வேணுகோபால்’ எடுத்த புகைப்படத்துடன் சென்ற இதழில் அசாதாரணத் துணிச்சலுடன் நமது ஆசிரியர் கவர் ஸ்டோரி எழுதியிருந்தார். (தலைப்பு ‘துளை மாறிய பட்டன்’ என்பதும் நினைவிருக்கலாம்)


முதல்வரின் கோபம்

இதையறிந்த முதல்வர் நமது ஆசிரியரை அழைத்து "பத்திரிகைகளுக்கென்றுதான் நான் எவ்வளவோ கொலை, கொள்ளை ஊழல்கள் செய்துகொண்டிருக்கிறேனே.. அதையெல்லாம் விடுத்து இவ்விஷயத்தை ஏன் எழுதினீர்?" என்று ஏசியுள்ளார். கவர்னர் ‘கத்திரி கனகவேலன்’ பேனாவை மூடாமல் பாக்கெட்டில் வைத்ததையே தைரியமாய் வெளியிட்டவராயிற்றே நமது ஆசிரியர்! இதற்கா அஞ்சுவார்? முடிந்ததை செய்யுங்கள் என்று வீரமாய்ப் பேசிவிட்டு வந்துவிட்டார்.

முதல்வர் சதி


அதனால் கோபம் கொண்ட முதல்வர் ஓர் எறும்புப் படையை நமது ஆசிரியரின் வீட்டிற்குள் செலுத்தியுள்ளார். கருணையுள்ளம் கொண்ட நமது ஆசிரியர் இது முதல்வரின் சதி என்றறியாமல் ஓர் எறும்பை எடுத்துக் கொஞ்சியிருக்கிறார். பாசத்துடன் அவ்வெறும்பிற்கு உணவூட்ட (கிறுக்குத்தனமாய்) கையில் எடுத்தபோது முல்வரனுப்பிய அந்த வஞ்சகநெஞ்சம் கொண்ட எறும்பு நமது ஆசிரியரின் மூக்கை கடித்துவிட்டது. உடனே சுதாரித்துக்கொண்ட நமது ஆசிரியர் அருகிலுள்ள-ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போடாத-காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மிளகாய் மனோஜ்குமாரின் வசம் எறும்பை ஒப்படைக்க, அவரது புத்திசாலித்தனமான விசாரணையில் அந்த எறும்பு முதல்வரால் அனுப்பப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

சபதம்

இந்த எதிர்பாராத விபத்தால் ஜப்பானின் ‘முஹியாகோமான்ஷா’ ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ள நமது ஆசிரியர், முதல்வர் மீது இந்தக் குற்றச்சாட்டை கூறியபோது, முதல்வர் அவ்வெறும்பை தான் அனுப்பவில்லை எனவும் இது வெளிநாட்டு சதி என்றும் கூறினாராம். இதை ஏற்காத நமது ஆசிரியர் ‘இதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு முதல்வர் ராஜினாமா செய்யும் வரை நான் ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே சாப்பிடுவேன்’ என்று சபதமெடுத்துள்ளார்.

---------------------------------------------------------------------------------------------
(எல்லாம் சரி, ‘இந்தப் பதிவுக்கும் நீங்க வெச்ச தலைப்புக்கும் என்ன சம்பந்தம்?’ -ன்னுதானே யோசிக்கறீங்க? இந்தப்பதிவ படிச்சுட்டு நீங்க என்னைப் பத்தி நினைக்கறதத்தான் தலைப்பா வெச்சேன்!)

கடைசி ஓவரில் ஒரு ஆபரேஷன்

டென்ஷனின் உச்சத்தில் இருந்தேன் நான். ராஜஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் பதினைந்து ரன்கள் தேவை. மும்பை அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஆடிக்கொண்டிருக்கிறது. தோற்றால் அரையிறுதி வாய்ப்பு பறிபோகும். 19-வது ஓவர் முடிந்து விளம்பரம் போட்டிருந்த வேளையின் போன் ஒலித்தது. சௌந்தர்!

உடனே எடுத்தேன்..

"சௌந்தர்.. மேட்ச் பாக்கறியா?"

"இல்லடா. நான் ஃபேக்டரிலதான் இருக்கேன். இன்னைக்கு நைட் வொர்க்"

"ஆமாமா.. எங்கப்பா கூட வந்திருப்பாரு" சௌந்தர் பணிபுரியும் ஃபேக்டரியில், கட்டிங் செக்ஷனில்தான் என் அப்பாவும் பணிபுரிகிறார்

"ஆமா, மேனேஜர் இல்லயா? எப்படி உள்ளேர்ந்து இவ்ளோ தைரியமா கூப்பிடற?"


"நான் யாருக்கும் சொல்லாம வந்து பாத்ரூமுக்குள்ள இருந்து பேசறேன்.. அத விடு.. மேட்ச் என்னாச்சு?"


"போடா... சரியான மேட்ச். கடைசி ஒவர்ல பதினஞ்சு ரன் வேணும் ராஜஸ்தானுக்கு."


"டேய்.. லைன்லயே இருக்கேன்.. என்னாகுதுன்னு சொல்லுடா"


"தில்ஹாரா பௌலிங்.. முதல் பால் ஒரு ரன்.. ரெண்டாவது பால் நாலு.. இல்லல்ல.. மூணு ரன்"


"இன்னும் நாலு பாலுக்கு பதினொரு ரன் வேணுமா?"

"ஆமா .. ஹையோ.. சிக்ஸ்! ச்சே..இது வேற.. எவன்னே தெரியல, புது நம்பரா இருக்கு.. கால் வெயிட்டிங்ல கூப்பிட்டுட்டே இருக்கான்"

"இந்நேரத்துக்கு யாரா இருக்கும்? என்னை மாதிரி உன் ஃபிரண்ட்தான் ஸ்கோர் கேட்க கூப்புடுவான். கட் பண்ணிடாத. என்னாச்சுன்னு சொல்லுடா"

"கடைசி மூணு பாலுக்கு அஞ்சு ரன் வேணும்.. நாலாவது பாலுக்கு சிங்கிள் எடுத்துட்டாங்க"


"இன்னும் ரெண்டு பால்தான? நாலு ரன் வேணும்ல?"

"அஞ்சாவது பாலும் சிங்கிள். கடைசி பால்.. மூணு ரன் வேணும்.. ச்சே.. இப்போ போய் வைடு பால் போடறான்டா.."

"ஐயோ.. நல்ல மேட்ச் மிஸ் பண்ணீட்டேன் போல.. சொல்லுடா"

"இரு இரு.. லாஸ்ட் பால். ரெண்டு ரன் வேணும்.. அடிச்சுட்டான்.. ஐயோ.. தில்ஹாராவே தடுத்திருக்கலாம்.. விட்டுட்டான்.. ஒரு ரன் ஓடீட்டாங்க.. செகண்ட் ரன் எடுக்கறது கஷ்டம்.. டிராதான் ஆகும்.. ஐயையோ.." நான் பேச்சற்றுப் போனேன்.

"என்னாச்சுடா.. ஹலோ..ஹலோ.."

"போடா.. ஈஸி ரன் அவுட். ஜெயசூர்யா பௌலர் எண்ட்-ல வந்து நின்னுட்டு கைக்கு வந்த பாலை மிஸ் பண்ணீட்டான்டா.. ச்சே.."

"ஐயையோ.. சரி விடு.. இப்போ நம்ம சென்னை டீம் செமி ஃபைனல் போறது ஈஸியாய்டுச்சுல்லியா?"


"ஆமா.. ஆனா.. இருடா.. யாரோ கதவைத் தட்டறமாதிரி இருக்கு" நான் எழுந்து போய் கதவைத் திறந்தேன்.


அப்பாவுடன் கட்டிங் செக்ஷனில் பணிபுரியும் வாசு நின்றிருந்தார்.
"என்ன தம்பி இது.. எவ்ளோ நேரம் உன் ஃபோனுக்கு ட்ரை பண்றது? உங்க அப்பா க்ளவுஸ் போடாம லே-கட்டிங் மெஷின் ஓட்டி, கைல கத்தி பட்டு ரெண்டு விரல் துண்டா விழுந்துடுச்சு. ஆஸ்பத்திரி கொண்டு போயாச்சு.. ஆபரேஷன் பண்ணணும்ன்னு சொல்றாங்க. சீக்கிரம் கிளம்பு"
எதிர்முனையில் சௌந்தர் போனைத் துண்டித்தான்.

Monday, May 26, 2008

விபரீத முடிவு!

இந்தப் பதிவு நம்ம தல லக்கிலுக் அவர்களுக்கு சமர்ப்பணம்!

அவன் இப்படி ஒரு விபரீத முடிவை எடுப்பான் என்று யாருமே எதிபார்க்கவில்லை. மனைவி, மகள்கள் எல்லாரும் அவனது நண்பர்களுக்கு போன் போட்டு, உதவி கேட்டு வருத்தப் பட்டுக்கொண்டிருந்தார்கள். அவனது பெற்றோருக்கு கூப்பிட்டு மனைவி சொன்ன போது பொரிந்து தள்ளிவிட்டார் அவன் தந்தை..

"ப்ளஸ் டூ-வுல பெயில் ஆனப்போ அவன் தூக்குல தொங்கப் போனான்.. அப்போ கூட நான் இந்த அளவுக்கு வருத்தப்படல.. எப்போ இப்படி ஒரு முடிவை எடுத்தானோ, இனிமே அவன என் மகன்-ன்னு எப்படி சொல்லிக்கறது?" என்று மிகவும் ஆதங்கப்பட்டார்.

மனைவி வேறு வழியில்லாமல் அவன் உற்ற நண்பன் செந்திலுக்கு போன் பண்ணி, விஷயத்தை சொன்ன போது அவனால் நம்ப முடியவில்லை..

"அவன் எப்படி இப்படி ஒரு முடிவை துணிஞ்சு எடுத்தான்-ன்னு தெரியலையே.. நீ கவலைப் படாதம்மா.. நான் இப்பவே அவன்கிட்ட பேசறேன்"

அவனை அழைத்துகேட்டபோது அவன் யார் பேச்சையும் கேட்கும் மன நிலையில் இல்லை என்பது தெரிந்தது..

"என் மனச மாத்த முயற்சி பண்ணாதே செந்தில்.. யார் என்ன சொன்னாலும் நான் எடுத்த முடிவுல மாற்றம் இருக்காது.."

"இல்லடா .. ஏற்கனவே இதுனால எத்தனையோ பேர் பாதிக்கப் பட்டு இன்னும் மீள முடியல.. இப்போ"

"போனை வை செந்தில்.. என்ன ஆனாலும் நான் பின் வாங்கப்போறதில்லை" சொன்ன படியே நுழைந்தான் "குருவி" படம் போட்டிருந்த தியேட்டருக்குள்!

காதலுடன் சில கவிதைகளும்

என்னுடைய ‘கடந்து போன கடித நாட்கள்’ பதிவை எழுதுமுன், பழைய கடிதங்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது, உமாவிற்கு நான் எழுதிய பல காதல் கடிதங்களின் நடுவே 03.11.1996-ல் நான் அவளுக்கு தீபாவளிப் பரிசாய் காதலுடன் கொடுத்த சில கவிதைகள் கண்ணில் பட்டது. படித்து முடித்து கண்மூடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தபோது அருகே வந்த உமா கேட்டாள்..

"ஏன் கிருஷ்ணா..ரொம்ப கஷ்டமாயிருக்கா? அப்போ படிக்கறப்ப எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்!!"

அடிப்பாவி.. அவ்ளோ மோசமாவா இருக்கு? நீங்களே சொல்லுங்க...
---------------------------------------------------------------------------
‘என்னிடம் பிடிக்காதது
ஏதுமிருந்தால் சொல்லுங்கள்’ என்கிறாய்.
பிடிக்காதது ஒன்றுமில்லாததாய்
நீ இருப்பதால்தானே
உன்னையே பிடித்தது!

இருந்தாலும்-
உன்னிடம் ‘பிடிக்கவில்லை’
என்று சொல்ல ஒன்றுண்டு.
இன்னும் நான் உன்னைக்
கட்டிப்
"பிடிக்கவில்லை!"
--------------------------------------
நான் வருத்தப்படும்போதெல்லாம்
நீ கோபப்படுகிறாய்..
நீ கோபப்படும்போதெல்லாம்
நான் வருத்தப்படுகிறேன்..
இதனால்தான் அன்பே..
நம்மை நெருங்க இயலாமல்
வருத்தங்கள் வருத்தப்படுகின்றன..
கோபங்கள் கோபப்படுகின்றன
.
--------------------------------------
என் சந்தோஷங்களின் போதெல்லாம்
நீ பக்கத்திலேயே இருக்க வேண்டும்
என்று நினைப்பேன்..
ஆனாலுமென்ன
நீ பக்கத்தில் இருக்கையிலெல்லாம்
நான் சந்தோஷமாய்த்தான்
இருக்கிறேன்.

-------------------------------------
கேட்டுக்கொண்டேயிருக்கிறாய்..
‘பண்டிகைக்குப் பரிசாய்
என்ன வேண்டும்’ என்று
என்ன தந்துவிடமுடியும் உன்னால்
ஏற்கனவே தந்த
உன் இதயத்தைவிட சிறந்ததாய்?
------------------------------------
பார்க்கப் பார்க்க சலிக்காதது
எதுவென்று கேட்டால்
கடல், ரயில்,யானை என்று
பலரும் பலதும் சொல்கிறார்கள்..
எவனும்
அவனவன் காதலியை
சரிவரப் பார்த்ததில்லை போலிருக்கிறது!

------------------------------------
எத்தனையோ பெண்கள்
காதலித்து
மனிதனை கவிஞனாக்கியதுண்டு.
ஆனால்-
ஏற்கனவே கவிஞனான என்னை
மனிதனாகவும் ஆக்கியவள்-நீ!
------------------------------------------------------
கடைசி கவிதையில் என்னை நானே கவிஞன் என்று சொல்லிக்கொண்டதற்கு மன்னிக்கவும்! (எல்லாம் அறியாத வயசு!)

(ஆமா இந்த பதிவை `கவிதை’ன்னு போடறதா.. நகைச்சுவை-ன்னு போடறதா?)

நாட்குறிப்பில் இல்லாத பக்கங்கள்

என் கஸின் பிரதர் வீடு கட்டியிருந்தான். கிரகப்பிரவேசத்திற்காக, சனிக்கிழமை இரவு திருப்பூரிலிருந்து உடுமலை சென்றேன். பஸ்சை விட்டிறங்கி, நண்பனின் பைக் வாங்கிக் கொண்டு, அவர்கள் சொன்ன முகவரியைத் தேடி போய்க்கொண்டிருந்தபோது, சொன்ன இடத்திற்கு அருகிலேயே-ஒரு கல்யாண மண்டபம் அலங்காரங்களுடன் ஜொலித்துக் கொண்டிருந்தது.
அந்த மண்டபம் முன்னாடி நின்றிருந்த ஒருவரிடம்..

"இங்க கிரகப்பிரவேசம் நடக்கற.." கேட்டுமுடியுமுன் அவர் சொன்னார்..

"இந்த மண்டபத்துலதான்"

நான் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே நடந்தேன். உள்ளே போகுமுன், என் தம்பியின் ஃபோன் வந்தது..
"எங்க இருக்க?"
நான் சொன்னேன்.
"லூஸா நீ? கிரகப் பிரவேசம் எவனாவது மண்டபத்துல வெப்பானா?"
அட.. ஆமாம்ல.. இருந்தாலும் விட்டுக்கொடுக்காமல் "இல்ல.. வித்தியாசமா பண்ணுவ-ன்னு நெனச்சேன்"

திட்டிவிட்டு வீட்டின் அடையாளம் சொல்லி வரச்சொன்னான்.
நான் மண்டபத்து வாசலில், எனக்கு பதில் சொன்ன பெரிய மனுஷனை தேடினேன். நாலைந்துபேருடன் அமர்ந்து கர்னாடகாவில் பா.ஜ.க ஜெயிக்குமா என்று யாரோ கேட்டதற்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார். (இதே வேலையா இருப்பாரு போல..)
இவனை விடக்கூடாதுடா என்று நினைத்தவாறே போய்க்கேட்டேன்..
"ஏங்க, நான் கிரகப்பிரவேசம் எங்க-ன்னுதானே கேட்டேன்"
"ஆமாம், இந்த மண்டபம் கட்டி, இன்னைக்குதான் கிரகப்பிரவேசம் நடத்துறாங்க. அதத்தான் கேக்குறீங்க-ன்னு நெனச்சு சொன்னேன்"

இதுல இப்படி ஒண்ணு இருக்கா.. என்று கிளம்பி, அட்ரஸ் கண்டிபிடித்த கதையை சொன்னபோது மற்றொரு கஸின் சுப்பிரமணி கேட்டான் "வீடு கட்டி பிரவேசம் பண்ணினாதானே ’கிரக’ப்பிரவேசம், அது ’மண்டப’ப் பிரவேசமல்லவா?" என்று. சரிதான்!

---------------------------------------------------------------------------

இந்தவார ‘துக்ளக்’கில் ( 28-05-2008) நம்பியாரைப் பற்றி படித்த ஒரு செய்தி ஆச்சரியமாக இருந்தது. ஐம்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் நரசிம்ம பாரதி என்பவர் நாயகனாக நடித்து 1950-ல் வெளியான ‘திகம்பரசாமியார்’ படத்தில் நம்பியார் பதினோரு வேடங்களில் நடித்துள்ளாராம்!
கிரேட்! யாருக்காவது இது குறித்த மேல்விபரங்கள் தெரியுமானால் பகிர்ந்துகொள்ளலாமே!

----------------------------------------------------------------------------

இன்று காலை கலைஞர் டி.வி.யில் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தேன். எனது ஊருக்கு (உடுமலை) அருகேயுள்ள திருமூர்த்திமலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பதினைந்துபேர் அடித்துச் செல்லப்பட்ட நியூஸைப் போடுவார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். (நான் பைக் வாங்கிச் சென்றிருந்த என் நண்பன் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்படுமுன் அங்கேதான் இருந்தான், எனக்காகத்தான் சீக்கிரம் வந்திருக்கிறான்! காணாமல் போனவர்களில், இறந்தவர்களில்-நமக்குத்தெரிந்தவர்கள் யாரேனும் இருப்பார்களோ என்ற பதைபதைப்பும் சேர்ந்துகொள்ள..அந்த நியூஸைப் பார்ப்பதில் ஆர்வமிருந்தது) அதற்கு முன் ஐ.பி.எல். போட்டிகளின் நேற்றைய ஆட்டங்கள் பற்றி செய்தி சொன்னார்கள். எரிச்சலாக இருந்தது எனக்கு. ‘இப்போ இது முக்கியமா’ என்று. இடைவெளிக்குப்பிறகுதான் திருமூர்த்திமலை நியூஸைப்போட்டார்கள்.
எத்தனையோமுறை, மேட்ச் பார்க்காமல் இரவு தூங்கி, அடுத்த நாள் காலை முதல் வேலையாக cnn-ibn, ndtv 24x7 என்று மாற்றி மாற்றி போட்டு நேற்றைய மேட்ச் என்னாச்சோ-என்று பதறியிருக்கிறேன். இப்போது அதுவே எரிச்சலாக நினைக்கிறேன்! ‘பக்கத்துவீட்டில் எரியும் தீ நம் சட்டையைப் பிடிக்கும்வரை நாம் கண்டுகொள்வதில்லை’ என்பது நிஜம்தானில்லையா?

Saturday, May 24, 2008

ஒரு குடிகாரனின் பதிவுகள்..

ஆனந்தவிகடனில் இந்த வாரம் வந்திருந்த, நான் தரையில் அமர்ந்து கொண்டு படித்த (நின்றபடி படித்திருந்தால்‘விழுந்து விழுந்து’ சிரித்திருப்பேன்!) ஒரு ஜோக் பற்றி எழுதலாம் என்று நினைத்தால், நம்ம தல லுக்கிலுக் அதைப் பற்றி எழுதீட்டார்.. (‘என்னது கமல் மேல குற்றச்சாட்டு வந்திருக்கா, ஏன்?’ ‘ஆமாம், தசாவதாரம் ஆடியோ ரிலீசுக்கு ஜாக்கிஜான் வேஷத்துல வந்ததும் கமல்தானாம்!’ - இந்த ஜோக்கை எழுதின பா.ஜெயக்குமாருக்கு ஒரு ஷொட்டு!) அதனால அதே விகடன்ல வந்திருந்த வேற ரெண்டு ஜோக்ஸ்..

"தமிழ்நாட்டு மக்களுக்கு இப்பதான் நான் ரொம்ப அவசியம்.. ஆனா உடனடியா என்ன செய்யறதுன்னு குழப்பமா இருக்கு.. ஆனா, பெருசா ஏதாவது செய்யணும்னு முடிவு பண்ணீட்டேன்!"

"நான் சும்மா இருக்கறதா நிறையப் பேர் நினைச்சுட்டு இருக்காங்க. நான் ஒண்ணும் சும்மா இல்லீங்க பிரதர். என்னோட லேப்டாப் மூலமா எல்லாத்தையும் வாட்ச் பண்ணீட்டுத்தான் இருக்கேன். உலகத்துல எங்கே, எது நடந்தாலும் என் கவனத்துக்கு வந்துடும். எல்லாத்துக்கும் ஒருநாள் வெச்சுக்கறேன்!"

இதையெல்லாம் சொன்னது யாரு? சுப்பிரமணிய சாமி-ன்னு நினைக்கறீங்களா? இல்ல! நம்ம நடிகர் கார்த்திக்! (இதப் படிச்சதுக்கப்பறம் எனக்கு குளிக்கும் போது வெக்க வெக்கமா இருக்கு! அவரு லேப்டாப் மூலமா ‘எல்லாத்தையும்’ வாட்ச் பண்றாரே!)

வடிவேலு ஸ்டைலில் ஒன்று கேட்க வேண்டும்.. "ஏண்டா..நல்லாத்தாண்டா இருந்தீங்க?"

--------------------------------------------------------------
நண்பன் ஒருவனின் சார்பாக நடந்த பார்ட்டிக்காக அலைந்தோம்.. (பார் கிடைக்காமத்தான்..! கேட்டா கள்ளச் சாராய சாவுனால எல்லா ‘பார்’லயும் ரெய்டு-ங்கறாங்க.. முட்டாப் பசங்க! செத்த பிறகு என்னடா ரெய்டு? கள்ளச் சாராயம் குடிக்கறவன் பார்லயா வந்து குடிப்பான்?) ‘ரெய்டுன்னா என்ன பண்ணுவாங்க?’ என்று ஒரு பார் ஊழியரைக்கேட்டேன். ‘எங்களுக்கு ஒண்ணும் பெருசா பாதிப்பு இல்லீங்க.. வழக்கமான மாமூல்தான்.. உங்களுக்குதான் கஷ்டம்.. நீங்க அடிச்சுட்டிருக்கற சரக்க எடுத்துட்டுப்போய்டுவாங்க’ என்றான். ‘வாங்க சார்.. எங்க போனாலும் நிருபர் கணக்கா பேட்டி எடுத்துட்டு’ என்று உடன் வந்தவர்கள் திட்ட-கடைசியாக அந்த நண்பனது வீட்டிலேயே பார்ட்டி முடிந்த பிறகு வழியனுப்பும் போது அவன் சொன்னான்.. "எல்லாரும் வீட்டுக்குப் போன பின்னாடி ஃபோன் பண்ணுங்க.. எனக்கு ‘பக் பக்’னு இருக்கும்" என்று. எங்கள் மேல் என்ன ஒரு அக்கறை என்று புளகாங்கிதமடைந்த்து ஆனந்தக்கண்ணீருடன் கிளம்பினோம்...

இப்போது மணி இரவு 1.34. நான் வீட்டுக்கு வந்துட்டேன்னு ஃபோன் பண்றேன்.. Flat ஆயிட்டான் போல.. எடுக்கவே மாட்டீங்கறான்..!
______________________________________________
காலையில் ஒரு போஸ்டர் பார்த்தேன்..

‘இடி முழக்கமிடும் இரண்டாவது வாரம்-சூப்பர் ஹிட்: குருவி!!

பகக்த்திலேயே இன்னொரு போஸ்டர்..

‘பத்தாவது நாள்-மெஹா ஹிட்: அரசாங்கம்"

சூப்பர் ஹிட்-க்கும், மெஹா ஹிட்டுக்கும் என்னடா அர்த்தம் அன்று மண்டையை போட்டு உடைத்துக் கொண்டிருந்த வேளையில் இன்றைய கலக்கப் போவது யாரு சீஃப் கெஸ்ட்-டாக வந்தவரை அந்த நிகழ்ச்சியின் காம்பியரர் (நான் மிகவும் நேசிக்கும் ஃபிகர்-ரம்யா!) அழைத்தார்.. "வீரத் தளபதி" ரித்தீஷ் என்று.. வீரத் தளபதியா? இரண்டு பீர் தராத மயககத்தை அந்த வர்ணனை தந்தது!(இந்த லட்ஷணத்தில் என்னோடு இருந்த ஒரு நண்பர் கேட்டார்-‘யாருங்க அது?’ என்று.. நலல வேளை..‘வீரத்தளபதி’ காதில் விழவில்லை!)
----------------------------------------------------------------------
ஐ.பி.எல். போட்டிகள் முக்கியமான கட்டத்தை எட்டிவிட்டன.. அவரவர்கள் மாநிலத்தை விட (வேறுவழியில்லாமல்) வேறு மாநிலத்தை ரசிகர்கள் ஆராதிக்கும் நேரம் இது.. என்ன ஆனாலும் போட்டிகள் முடிந்த பிறகு பத்ரிநாத், ரோஹித் சர்மா, யூசுப் பதான், மன்பரீத் கோனி, வேணுகோபால் ராவ், டிண்டா, விரோத் கோஹ்லி என்று பலருக்கும் வாழ்வு வரும் என்ற நம்பிக்கையில்.. எல்லா இந்தியர்களும்!
------------------------------------------------------------------------
ஐ.பி.எல். போட்டிகளைவரை உடைகளில் எந்த அணி உங்களை கவர்ந்தது?

என்னைப் பொறுத்தவரை..

1 = Kolkatta Knight Riders
2 = Mumbai Indians
3 = Chennai Super Kings
4 = Rajasthan Royals
5 = Delhi Dare Devils
6 = Kings XI Punjab
7 = Royal Challengers Bangalore
8 = Deccan Charges

இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்திருப்பின்.. பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! (தெரிவிச்சா மட்டும் என்ன நடந்துடப்போகுது?? ஒண்ணியுமில்ல!)

Friday, May 23, 2008

நையப்புடை



அரசியல்வாதி மறைமுகமாய்
துரோகம் செய்கையில்

அவசரமென்று வாங்கிய

பெருந்தொகையை

நண்பன்

திருப்பியே

தராது போகையில்

பஞ்சாயத்து ஆபிஸில்

ரேஷன் கடைகளிலென

பலவிடங்களில்

பலவகைகளில்

ஏமாற்றப்படுகையிலெல்லாம்

ஓடி ஒளிகிற கோபம் ...

பாக்கி காசை

கண்டக்டர் தராதபோதும்

சர்வர் தோசை கொணர

தாமதமாகும்போதும்தான்

வெளிப்பட்டுத் தொலைக்கிறது..

கடந்து போன கடித நாட்கள்!

கீழே இருப்பது என் கவிதை அல்ல!

அனைத்துக் கடிதங்களுக்கும்
பதில் எழுதி முடித்த
மேஜை என்னிடமில்லை.
நான் எழுதியதற்குப் பதில்
வரும்வரை
காத்திருக்கவும் அவசியமில்லை.
வந்து பிரித்துப் படிக்காத
ஒரே ஒரு கடிதமும்
எழுதிப் பெட்டியில் இடாத
எத்தனையோ கடிதங்களும்
என் வசம் உண்டு.
தொலையாத நட்சத்திரங்களும்
உதிராத நட்சத்திரங்களுமாகத்தான்
உயரத்தில் இருக்கிறது
வானம்.
-கல்யாண்ஜி (‘முன்பின்’-தொகுப்பிலிருந்து)

கடிதம் எழுதும் பழக்கம் எங்கே போனது? இப்போது யாரும் அவ்வளவாக கடிதங்கள் எழுதுவதில்லை.
நான் பல வருடங்களுக்கு முன் பத்திரிகைகளில் படைப்புகள் எழுதி அனுப்பிக்கொண்டிருந்த நேரத்தில்
எனக்கு நிறைய கடிதங்கள் வந்து கொண்டிருந்தது. பதினோரு மணிக்கு கிருஷ்ணாபுரம் (உடுமலைப்பேட்டை) தபால் நிலையத்தில் தபால் பை வரும்.அவர்கள் அதை sorting செய்து எடுத்து வர பன்னிரெண்டு, ஒரு மணி ஆகி விடும் என்பதால் நானே போய் அவர்களோடு பேச்சுக் கொடுத்து நின்றபடியே எனக்கான கடிதங்களை முன்கூட்டியே வாங்கி வருவேன். எனக்கு வந்த கடிதங்களை எடுத்துக் கொண்டு சைக்கிளில் வரும்போது, என்னை போஸ்ட்மேன் என்று நினைத்துக் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.. அவ்வளவு கடிதங்கள் வந்து கொண்டிருந்தது. (அதில் பாதிக்கு மேல் திரும்பி வரும் படைப்புகளாகத்தான் இருக்கும்!)

நான் அதிகமாக கடிதம் எழுதியது (past tense!!!) என் ப்ரியமான எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுக்குத்தான்! சுபா, ராஜேஷ்குமாருக்கும் எழுதியதுண்டு. சுஜாதா, பாலகுமாரன் ஆகியோரின் அதிகப் படைப்புகள் என் அலமாரியில் உள்ளதெனினும், அவர்களுக்கு எழுதியதேயில்லை. ஏதோ ஒரு கட்டுரையில் "உண்மையான வாசகர்கள் கடிதமெழுதுகிற ரகமில்லை" என்று சுஜாதா எழுதியிருந்ததும் ஒரு காரணம்.

பட்டுக்கோட்டை பிரபாகர் & சுபா என் கடிதங்களுக்கு தவறாமல் பதிலெழுதுவார்கள். அதிலும் PKP எல்லா கடிதத்திற்கும் பதிலெழுதி விடுவார்! இன்றளவும், என்னையும் ஒரு பொருட்டாக மதித்து ஒவ்வொரு புத்தாண்டிற்கும் வாழ்த்து அனுப்பிக்கொண்டிருக்கிறார்! மகளது திருமணத்திற்கு அழைப்பனுப்பினார். அவரது ஒரு கடிதம்தான் என்னை கதை, கவிதைகள் எழுத வைத்தது! என் எழுத்துக்கு என்ன பாராட்டு கிடைத்தாலும் அது PKP ஒருவருக்குத்தான் சமர்ப்பணம்.

1992-ல் பி.கே.பி & சுபா-வின் உங்கள் ஜூனியர் மாத இதழின் ஆசிரியர் குழுவின் பனிரெண்டு பேரில் ஒருவனாக இடம்பெற்று இதழ் தயாரித்தோம். அப்போது என்னோடு ஒருவனாக இருந்த ‘சேலம் கண்ணனு’க்குத்தான் - நண்பர்களில்- அதிகமாக கடிதம் எழுதியிருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒருகாவியம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை.. ஆனால் வித்தியாசமாக எழுதப்பட்டிருக்கும் அந்த கடிதங்களை ஒரு முறை பார்த்து விட எனக்கு ஆசை இருக்கிறது! அவனும் எனக்கு நிறைய கடிதங்களெழுதியிருக்கிறான். ஆனால் இப்போது..? தொடர்பேயில்லை!! எங்கேயிருக்கிறாய் கண்ணா?

இந்த பதிவு எழுதுவதற்காக என் பழைய கடிதங்கள் அடங்கிய பை ஒன்றை தேடி எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.. (உங்கப்பாவுக்கு வேற வேலையே இல்ல.. என்ற உமாவின் வசவுகளோடு!) என் தூக்கத்தை கெடுத்த ஒரு கடன்காரனின் கடிதம் உட்பட எத்தனை வித விதமான கடிதங்கள்! பலவருடங்களுக்கு முன், ஒரு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி உடுமலைப்பேட்டை போலிஸ் இன்ஸ்பெக்டருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன்.. நான் ஒழுங்காக வீட்டில் பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பேன்.. இல்லை என்றால் என்னை எப்போது வேண்டுமானாலும் அரெஸ்ட் செய்து கொள்ளலாம் என்று! (எப்படி எல்லாம் ஏமாத்தி இருக்காங்கப்பா!) என்னை சிறை பிடித்து செல்ல, நான் ஆகஸ்ட் பதினைந்து அன்று கடிதம் எழுதி இருக்கிறேன்! அதே போல ஒரு பத்திரிகை ஒன்றுக்கு நான் எழுதிய விமர்சனம் சிறந்ததாக தேர்வாகி, முடிந்தால் அன்னை தெரசா அல்லது பாக்கியராஜை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அந்த பத்திரிகை அலுவலகத்திலிருந்து வந்த கடிதம்.. (என் ராசி.. அந்த சந்திப்பு நடப்பதற்குள், பத்திரிகை ஆசிரியருக்கும், பதிப்பாளருக்கும் கருத்து வேற்றுமை வந்து இழுத்து மூடி விட்டார்கள்!) இப்படி பலப்பல ..

கடிதங்கள் சம்பந்தப்பட்ட புத்தகங்களில் என்னை மிக மிக கவர்ந்தது.. கல்யாண்ஜி-யின் "எல்லோர்க்கும் அன்புடன்" கடிதத் தொகுப்பு தான். எப்போது நான் சோர்வடைந்தாலும் எடுத்துப் படிக்கும் புத்தகங்களில் அதுவும் ஒன்று. அதன் பின்..கு.அழகிரிசாமி கி.ராவுக்கு எழுதிய கடிதங்கள், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள் (இதம் தந்த வரிகள்), புதுமைப்பித்தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் (கமலாவுக்கு)

கடிதப் பழக்கம் குறைந்ததை குறித்து விவாதித்து நாங்கள் எங்கள் பரிசல் குழுவின் சார்பாக எங்களுக்குள்ளேயே கடிதம் எழுதிக்கொள்ள வேண்டும் என்று ஆரம்பித்தோம்..நான் குழுவின் மற்ற நண்பர்களுக்கு (செந்தில், கனலி,வேடசந்தூர் ரவி, சௌந்தர், மகேஷ், கிரீஷ்) ஒவ்வொரு கடிதம் எழுத, அவர்கள் எனக்கு ஒரே ஒரு கடிதம் எழுத அதுவும் நின்று போனது!

இந்தப் பதிவை இப்போது எழுதக் காரணம், அந்தக் கடிதங்கள் கொடுத்த அண்மையை இந்த வலைப் பதிவின் கமெண்டுகள் எனக்குத் தருகின்றன என்னும் உண்மையை ஒத்துக்கொள்ளத்தான்! rapp, ambi, illatharasi, delphine, களப்பிரர்,
கயல்விழி முத்துலட்சுமி என்று என்னை அன்பால் நனைத்த முகம் தெரியா நல் உள்ளங்களுக்கு என்ன சொல்லி அன்பை வெளிப்படுத்த?? (முதன் முதலில் எனக்கு பின்னூட்டமிட்ட நண்பன் ஜெயசக்திவேல் நன்றி சொன்னால் உதைப்பான் என்பதால்-சாரி!)
கவிஞர் சோமா வனதேவதா சொல்லியிருப்பது போல்..
"இவை எதுவும் இல்லாமலும்
ஒரு மனசு அறியாதா
தன்னைப் போல் இன்னொன்றை!"

Wednesday, May 21, 2008

Fivestar Hotel போனேனே!

நம்ம வெட்டிஆபீசர் ஹோட்டல் சாப்பாட்டு பத்தி எழுதினத படிச்சேன்..
(http://vettiaapiser.blogspot.com/2008/05/blog-post_20.html)

அவங்களோட வேண்டுகோளுக்கிணங்க நம்ம ஹோட்டல் அனுபவத்தை இந்த நல்லுலகத்தோட பகிர்ந்துக்க எழுதறேன்..

நமக்கு இந்த fivestar hotel அனுபவம் ரெண்டே தடவைதான்.. அந்த மாதிரி ஹோட்டல் எல்லாம் படத்துல பாத்ததோட சரி.. மத்தபடி மனைவி(உமா), குழந்தைகள் கூட சரவணபவன், ஆரியாஸ், அன்னபூர்ணா இதெல்லாம்தான் நம்ம சாய்ஸ்! இந்த மாதிரி ஹோட்டலுக்கு போறப்போ நமக்கு எப்பவுமே ரவா ரோஸ்ட், நெய் ரோஸ்ட் இந்த மாதிரி ஐடம்தான்.. மனைவிக்கு காளான் பிரியாணி, காளான் ரோஸ்ட்-இப்படி காளான் வகைகள் பிடிக்கும்.. (ஒரு ஹோட்டல்-ல போய் என் பொண்ணு காளான் வாட்டர் இருக்கா-ன்னு கேக்கற அளவுக்கு ஆயிடுச்சு!)

அதே மாதிரி காலைல சாப்படற பழக்கம் அதிகமா இல்ல.. திடீர்ன்னு வண்டில போறப்போ ரோட்டோர கடைகள்-ல பூரி சுட்டு அடுக்கி வெச்சிருப்பாங்களே.. அதைப் பாத்து ஆசையாயிடும்.. போய் ஒரு செட் சாப்பிட்டுட்டு போவேன்! அதை சொல்லி உமாகிட்ட திட்டு வேற வாங்கிக்குவேன்! வீட்ல செஞ்சா சாப்பிடாதீங்க-ன்னு!

அன்னபூர்ணா மாதிரி ஹோட்டல் போன நான் பின்பற்றும் ஒரு (நல்ல) பழக்கம் சர்வருக்கு டிப்ஸ் குடுக்காம.. வாட்டர் பாய், க்ளீனிங் பாய் - இவங்களுக்கு குடுக்கறது.. சர்வருக்கு எல்லாரும் குடுப்பாங்க.. இந்த பசங்களுக்கு என்னை மாதிரி யாராவதுதானே குடுப்பாங்க-ன்னு நெனைச்சுக்குவேன்.

சரவணபவன் ரேட் பத்தி வெட்டியாபீசர் சொன்னது சரிதான்.. நான் ஒருதடவை ஆபீஸ் விஷயமா காஞ்சிபுரம் ஒரு மாசம் தங்கி இருந்து அங்க இருக்கற சரவணபவன்-ல டெய்லி வயிறார சாப்பிட்டுட்டு ஆபீஸ் வந்து வவுச்சர (voucher) பாஸ் பண்ண நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்!

Fivestar ஹோட்டல்-ன்னா எங்க எம்.டி.கூட பெங்களூர் போயிருந்தப்ப ஒபெராய் -க்கு போனோம்.. அவங்க காமிச்ச மெனு கார்டுல எனக்கு ஊத்தாப்பம் மட்டும்தான் தெரிஞ்ச ஐட்டமா இருந்தது.. எவ்ளோ-ன்னு எம்.டி-கிட்ட கேட்டப்போ அதான் அதுலேயே போட்டிருக்கில்ல `நானூறு ரூபா'-ன்னார். எனக்கு மயக்கம் வர்ற மாதிரி ஆயிடுச்சு! "இதெல்லாம் ரேட்-ஆ?" ன்னு கேட்டேன். ஏன்னா Rs.-ன்னெல்லாம் போடாம 400, 450, 575 - ன்னு இருந்தது. நான் ஏதோ ஐட்டம்
கோடு நம்பர் போல-ன்னு நெனச்சுட்டேன். 400 ரூபாய்க்கு ஊத்தாப்பம் சாப்பிட்டா எனக்கு ஜீரணமாக ஒரு வாரம் ஆகும்னு வேண்டாம்னுட்டேன். அப்பறம் எம்.டி. கம்பெல் பண்ணி தந்தூரி வாங்கினார் (225/-). அதுக்கப்புறம் காபி சாப்பிட லீலா பேலஸ் போனோம். (நம்ப முடியலையா? நாங்க அந்த ஹோட்டல்கள்-ல இருக்கற வாட்டர் பால்ஸ் பாக்கத்தான் போனோம்..) லீலா பேலசும் ரேட்-ல நான் சளைச்சவ இல்ல- ன்னா! ஆனா நல்ல ஸ்பேஸ்! அங்க வந்திருந்த பிகருகளைகூட சரியா சைட் அடிக்க முடியல! (கூட எம்.டி!) ஆனா பசங்களும், பொண்ணுகளும் வர்றத பாத்தா... ஹூம்! அது வேற உலகம்!
நமக்கு முனியாண்டி விலாஸ் தாங்க!

பி.சி.ஸ்ரீராமுடன் ஒரு உரையாடல்

ஒரு வாரத்திற்கு முன்பு நடந்தது இது..
வழக்கம் போல மெயில்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன் நான். பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மெயில்களுக்கு நடுவே (சரி.. சரி.. சும்மாதான் சொன்னேன்..உடனே கோவிச்சுட்டு அடுத்த blog-குக்கு போயிடறதா..?) ஒரு மெயில் வித்தியாசமாகத் தென்படவே திறந்தேன். அடுத்த நிமிடம் சந்தோஷத்தில் நிஜமாகவே குதித்தேன் என்றுதான் சொல்லவேண்டும். பி.சி.ஸ்ரீராம் அலுவகத்திலிருந்து வந்திருந்தது அந்த மெயில்! சார்(பி.சி.ஸ்ரீராம் சார்!) என்னிடம் பேச விரும்புவதாகச் சொல்லி, ஒரு தொலைபேசி எண்ணையும் குடுத்திருந்தார்கள். உடனேயே தொடர்பு கொண்டேன். ஃபோனை எடுத்தவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு மெயில் விஷயத்தை சொன்ன போது சார் ஆஃபீசில் இல்லை என்றும் சரியாக நான்கு மணிக்கு தொடர்பு கொள்ளவும் சொன்னார்கள். நான்கு மணிவரை நிலைகொள்ளாமல் இருந்து விட்டு, தொடர்புகொண்டபோது ஒரிருவருக்குப் பிறகு சார் லைனில் வந்தார்..

"சார்.. வணக்கம். நான் கிருஷ்ணகுமார் பேசறேன் சார்" - கிட்டத்தட்ட எழுந்து நின்று பேசிக்கொண்டிருந்தேன்.

"வணக்கம். பசங்க உங்க blog பத்தி சொன்னாங்க.. பார்த்தேன்.. அதுல போட்டிருக்கற ஃபோட்டோஸ் எல்லாம் யாரு எடுத்தது?" -ஆஹா.. பி.சி. ஸ்ரீராம் சார் இந்தச் சிறியேனது blog-ஐப் பார்த்தாரா!

"சார்.. எல்லாம் நான் எடுத்ததுதான் சார்.. ஏன் சார்.."-ஒருவித பயத்துடனே கேட்டேன்.

"நோ..நோ.. நத்திங். நல்லாயிருந்தது! ஆமா.. நீங்க எந்த ஊரு?"

"உடுமலைப்பேட்டை சார். இப்போ திருப்பூர்ல இருக்கேன். நீங்க ஏற்கனவே என்னோட புகைப்படத்தை சிறந்ததா தேர்வு செஞ்சிருக்கீங்க சார்.."

"அப்படியா? எப்போ?"

"ஜூனியர் விகடன்-ல விஷூவல் டேஸ்ட் வந்தப்போ நான் எடுத்த ஒரு புகைப்படத்தை அந்த மாதத்தோட சிறந்த புகைப்படமா தேர்வு செஞ்சீங்க. ஒரு குழந்தை மேல பார்த்துட்டு இருக்கற மாதிரி.. இருட்டுல எடுத்த ஒரு புகைப்படம்.."
"ஓ.. ஞாபகம் இருக்கு. வெரி குட்! கீப் இட் அப். சென்னை வந்தா பாருங்க" - கடகடவெனச் சொல்லிவிட்டு ஃபோனைத் துண்டித்து விட்டார். எனக்கு தலைகால் புரியவில்லை!

"உங்களுக்கு தலைகால் தெரியாது.. தூக்கத்துல உளறல் வேற.. நேராப் படுங்க"-என்று என் மனைவி திட்டிய போதுதான் உண்மை உறைத்தது! அத்தனையும் கனவா?

"ஆமா.. மணி என்ன?"

"அஞ்சாகப் போகுது. இன்னும் ஒரு அரைமணி நேரம் தூங்குவேன்.. அதையும் கெடுத்துட்டீங்க"

அதிகாலை அஞ்சு மணியா! அதிகாலைல கனவு கண்டா பலிக்கும்-னு சொல்லுவாங்க. அதனால தினமும் தவறாம மெயில் பார்த்துட்டு இருக்கேன். பி.சி.ஸ்ரீராம் இல்லாட்டியும், அவர் சிஷ்யர் கே.வி.ஆனந்த்கிட்டேர்ந்தாவது ஒரு மெயில் வராதா என்ன?

(பின்குறிப்பு: Blog-ல இருக்கற புகைப்படங்களைப் பத்தி பல (Ok..Ok....) சில நண்பர்கள் கேட்டார்கள். அவர்களுக்கு பதில் சொன்ன மாதிரியும் ஆச்சு., உங்களை கொஞ்சம் அறுத்த மாதிரியும் ஆச்சு!)

Tuesday, May 20, 2008

சினிமா.. சினிமா..!

எனது ரொம்ப பழைய நோட் ஒன்றில் எழுதி வைத்திருந்தது இது.. இப்பொது ஏதாவது மாற்றமிருக்கிறதா அல்லது ஏதாவது சேர்ந்திருக்கிறதா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:-
  • சோகமான செய்தியை கேட்கும் கதாபாத்திரம், கண்டிப்பாக கையில் ஏதாவது வைத்திருந்து, செய்தி கேட்டதும் அதை கீழே போட்டு விடுவது..
  • டேபிள் ட்ராயரில் அவசரமாக எதையாவது தேடும்போது, ட்ராயர் முழுவதையும் கலை, கலை என்று கலைத்துவிடுவது..
  • கைதி, ஹீரோவாகவோ, முக்கிய நடிகராகவோ இருந்தால் கண்டிப்பாக FANCY NUMBER தான்!
  • வக்கீல் கக்கூஸூக்கு போனாலும் கருப்பு கோட்டோடுதான் போவார்!(அதேபோல அதிகபட்ச படங்களில் வக்கீல்கள் வில்லன்களோடுதான் இருக்கிறார்!)
  • எதிர்முனையில் ஃபோன் வைக்கப்பட்டாலும், திரையில் இருக்கும் கதாபாத்திரம் ரிசீவரை ஒரு பார்வை பார்த்துவிட்டுதான் வைப்பார்.
  • எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு உடை ஜிப்பாதான்.
  • அதேபோல.. டீச்சருக்கு - கண்ணாடி + குடை / கலெக்டர் - கண்ணாடி மட்டும்.
  • டாக்டர் சோகமான செய்தி சொல்லும் போது, மறக்காமல் கண்ணாடியை கழட்டுவார்.
  • பெரும்பாலான கதாபாத்திரங்கள் வண்டியை நிறுத்தும் போது சடன் பிரேக் போட்டுத்தான் நிறுத்துவார்கள்.

Monday, May 19, 2008

சேரிடம் அறிந்து..










வாசலில்
அமர்ந்திருக்கும்
கிழிந்த உடை, குருட்டுப் பிச்சைக்காரிக்கு
மறுக்கப்பட்டு...
தங்கமும், வைரமும் ஜ்வலித்துக்கொண்டிருக்கும்
`சாமி'யின் உண்டியல்களில்
சென்று சேர்கின்றன...
காசுகள்!

நீயும் உன் நாசமாப் போற ஐடியா-வும்


ரொம்ப நாளைக்கு பிறகு அந்தப் பையனைப் பார்த்தேன்.. எனது பழைய நெருங்கிய நண்பரின் தம்பி.. எப்போது நண்பரை பார்க்க செல்லும்போதும் அவனாக வந்து சந்தேகங்கள் கேட்பான்.. அறிவு தாகம் மிக்கவன்! நான் ஊரை விட்டு சென்னைக்கு வந்து நான்கைந்து வருடங்களாகிவிட்டன.. இவனைப் பார்த்ததும்கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருந்தது.. படித்து முடித்து இங்கே வேலைக்கு சேர்ந்திருப்பான் போல..
"அண்ணா.. எப்படி இருக்கீங்க?" - சிரித்த முகத்துடன் வந்தான்..
"டேய்.. செந்தில் .. எப்படிடா இருக்க?.. சென்னைலயா இருக்க நீ?"
"இல்லைண்ணா.. மாமா வீட்டுக்கு வந்தேன்.. நீங்க எப்படி இருக்கிங்க அண்ணா?
"நல்லா இருக்கேண்டா.. சரவணன் எப்படி இருக்கான்.. எங்க இருக்கான்?"
"நல்லா இருக்காரு.. புனா-ல இருக்காரு.. நாந்தான் கஷ்டப்படறேன்.."
அடடா.. என்ன ஒரு கொடுமை இது! என்ன கஷ்டம் இவனுக்கு.. கண்டிப்பாக நாம் உதவ வேண்டும் என்று நினைத்தபடியே.. "என்னாச்சுடா?" என்று கேட்டேன்..
"காசு சேரவே மாட்டிங்குது. உங்களைத்தான் ஐடியா கேட்கணும்.."
ஆஹா.. சிக்கீண்டாண்டா ஒருத்தன் என்று இருந்தது எனக்கு.. நான் அப்போதுதான் சேமிப்பு குறித்த சில புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்தேன்..
"இந்தா. எழுதிக்கோ" என்று அந்த புத்தகங்களின் பெயரையெல்லாம் வரிசையாக சொன்னேன்.. என்னிடம் விடை பெற்று சென்றான் அவன்..
அதன் பிறகு இரண்டு வாரம் கழித்து போன் வந்தது..
"என்னடா.. காசு சேர ஆரம்பிச்சாச்சா?"
"இல்லண்ணா.. அந்த புக் எல்லாம் வாங்கினதுல ஐநூறு ரூபா கடன்தான் ஆச்சு.."
ஆஹா.. இப்படி ஆகிப் போச்சே.. நான் மனம் தளராமல்..
"குபேரன் சிலை வாங்கி வைடா .. பணம் சேரும்.."
மறுபடி அடுத்த வாரமே கூப்பிட்டுவிட்டான்.. ஒன்றும் மாற்றமில்லையாம்.. இது என்னடா
சோதனை என்று நினைத்தவாறே.. மணி பிளான்ட் செடி வளர்த்து பார்க்க சொன்னேன்..
இந்தமுறை இரண்டே நாளில் போன் வந்தது.. ஓஹோ.. கொஞ்சம் பலன் இருக்கும் போல அதுதான் உடனே போன் என்று நினைத்தபடி போனை எடுத்தேன்..

"அண்ணா.. இன்னும் வேற எதாவது ஐடியா இருந்தா சொல்லுங்கண்ணா.. ரெண்டு ஐடியா பண்ணினா ஒன்னு இல்லாட்டி இன்னொன்னு பலன் தரும் இல்லையா?"

ஆகா.. அச்சடா.. நாம எட்டு அடி பாஞ்சா இந்த காலத்து பசங்க பதினாறு அடி பாயறான்களே-என்று புளகாங்கிதம் அடைந்தவாறே..

"சரி.. மீன் தொட்டி வாங்கிவை.. சில மீன் சொல்றேன்.. அதெல்லாம் வாங்கி வளர்த்து பாரு.. மொதல்ல மீன் தொட்டியும் மத்த ஐட்டம் எல்லாம் வாங்கு.. என்ன என்ன மீன் வாங்கணும்-னு நாளைக்கு சொல்லறேன்.. அதுக்கு சில புக்ஸ் இருக்கு.. இன்னைக்கு நைட் பாத்துட்டு நாளைக்குள்ள சொல்றேன்" - நம்மகிட்டயும் ஐடியா கேட்க பூமில ஒரு ஜீவன் இருக்கு என்கிற சந்தோஷம் தாங்கவில்லை எனக்கு! அந்த சந்தோஷம் இரண்டு மணி நேரம் கூட நீடிக்கவில்லை..! சரியாக இரண்டு மணி நேரத்தில் போன் வந்தது.. அவன்தான் என்று சந்தோஷமாக எடுத்த எனக்கு அதிர்ச்சி..

அவன் அப்பா பேசினார்..

"அப்பா.. கிருஷ்ணா பேசறேன்.. நல்லா இருக்கீங்களா?" என்று பாசமாக ஆரம்பித்தேன்..

"எல்லாம் இருக்கட்டும்பா.. நீதான் இவனுக்கு இந்த ஐடியா எல்லாம் சொல்லறதா?"

"ஆமாம்பா.. இந்த மாதிரி பண்ணினா பலன் இருக்கும்-னு நிறைய பேர் சொல்லி இருக்காங்க. ஆனா உங்க பையன் ராசிக்கு எந்த முறை அவனுக்கு பலன் தரும்-னு நாம் வெயிட் பண்ணிதான் பாக்கணும்.." சுவாரசியமாக சொல்லிக்கொண்டே வந்தவனை இடைமறித்தார் அவர்..

"கொஞ்சம் நில்லுப்பா..நீயும் உன் நாசமாப் போற ஐடியா-வும் " குரல் கடுமையாக இருந்தது..

"இதுவரைக்கும் நீ சொன்ன ஐடியா-வால ரெண்டாயிரம், மூவாயிரம் கடன் பண்ணிட்டு வந்திருக்கான் அவன்.."

"இல்லங்க.. அது வந்து.."

"யோவ்.. எல்லா ஐடியாவும் சொன்ன நீ.. ஒரு ஐடியா சொல்லி இருக்கனுமில்ல?"

"என்ன ஐடியா-ங்க?"

"ஆங்? அவன வேலைக்கு போக சொல்லி இருக்கனுமா வேண்டாமா?"

எனக்கு தலையில் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.. அவன் வேலைக்கே போறதில்லையா.. அடடா.. அத கேட்காமல் விட்டுட்டோமே.. அதன் பிறகு பத்து, பதினைந்து நிமிடத்திற்கு அவர் திட்டியதை எழுத முடியாது..

அதற்குப் பிறகு அவன் ஊரிலிருந்து எந்த போன் வந்தாலும் எடுக்கவே பயமாய் இருக்கிறது!


Saturday, May 17, 2008

காதலா.. காத்திருப்பா..?



காத்திருப்பது சுகம் என்று
மீராவுக்கு தெரிந்திருக்கிறதாம்..
காக்க வைப்பது பாவம் என்று
கண்ணனுக்கு ஏன் தெரியவில்லை?

Friday, May 16, 2008

ரயில் பயணம்!















நாட்டு நடப்புகள்..
நாளைய திட்டங்கள்..
நேற்றுப் படித்த புத்தகம்..
நினைவில் நிற்கும் கவிதைகள் என..
பேச எத்தனையோ விஷயங்களிருக்க
பண்பாடென்ற பெயரில்
ஏதோ ஒரு சைத்தான்
உன்னையும் என்னையும் தடுக்க
உன் ஜன்னல் வழியே நானும்
என் ஜன்னல் வழியே நீயும்
வேடிக்கை பார்த்துக்கொண்டு..
வீணாகிப் போகிறது தோழி
இந்தப் பிரயாண நேரம்!



விருந்தும் மருந்தும்

விருந்தும் மருந்தும் மூணு நாளைக்குன்னு சொல்லுவாங்க..

அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் விருந்துல எவ்ளோ மாற்றங்கள்..? ஒரு கற்பனை..

1960 - விருந்தாளிக்கு கடிதத்தில் .. "எப்போது வருவீர்கள்? உங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.. "

1970 - வந்த விருந்தாளி போகும்போது.. "இவ்ளோ சீக்கிரமா போறீங்களே? இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போங்க.."

1980 - "கிளம்பியாச்சா?.. சரி., போய்ட்டு லெட்டர் போடுங்க.."

1990 - "போய் சேர்ந்ததும் போன் பண்ணுங்க.."

2000 - "எப்போ ஊருக்கு போறிங்க? டிக்கெட் ரிசர்வ் பண்ணனும்.. அதான் கேட்டேன்.."

2010 - "நாளைக்கு காலைல இன்டர்சிட்டி -ல டிக்கெட் புக் பண்ணியாச்சு. இந்தாங்க டிக்கெட்"

2020 - "ஹலோ போலீஸ் ஸ்டேஷன் -ஆ? எங்க வீட்ல விருந்தாளிக ரெண்டு வாரமா தங்கி இருக்காங்க.. போற மாதிரி தெரியல.. வந்து நடவடிக்கை எடுங்க.."

2030 - "ஹலோ.. ஆமா., நாந்தான் பேசறேன்.. மொத்தம் மூணு பேர்.. கிட்டத்தட்ட மூணு வாரமாச்சு.. இன்னைக்கு நைட் ஒன்பது மணிக்கு வெளில போய்ட்டு வரப்போ முடிச்சிடுங்க.. அட்வான்ஸ் மாயாண்டிகிட்ட குடுத்தாச்சு.. மீதி காரியம் முடிஞ்சதும் தரேன்.."

வாழ்க ஜனநாயகம்!

எனது நண்பர் தங்கியிருந்த காம்பவுண்டில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்போது எழுதுகிறேன்...

சின்ன சின்ன பத்து வீடுகள் கொண்ட காம்பவுண்ட். இவர் மனைவி, குழந்தைகளுடன் வசிக்கிறார். ஒரு நாள் சனிக்கிழமை... இரவு ஒரு மணிக்கு இவரது வீட்டிற்கு எதிர் வரிசை வீடொன்றிலிருந்து சத்தம் வரவே வெளியே வந்து பார்த்திருக்கிறார். வடநாட்டிலிருந்து வந்து இங்கே பணிபுரியும் சில இளைஞர்களிருந்த அறையிலிருந்துதான் சத்தம். ‘தண்ணியப் போட்டுட்டு இவனுங்களுக்கு இதே வேலையாப்போச்சு’ என்று புலம்பியபடி வீட்டிற்குள் சென்றவர், கொஞ்ச நேரத்தில் ‘அலப்பறை’ அதிகமாகவே வெளியே வந்து
அவர்களின் அறையை எட்டிப் பார்த்திருக்கிறார். ஒருத்தன் மேல் இருவர் அமர்ந்து தாக்கிக் கொண்டிருந்ததை பார்த்த நம் நண்பருக்கு அதிர்ச்சி!

"பாதகம் செய்பவரைக் கண்டால்.." பாரதியார் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.. உடனே வீறுகொண்டு.. ‘ஏய்.. ஃபேமிலியெல்லாம் குடியிருக்கற காம்பவுண்ட்ல சும்மா இருக்க முடியாதா?’ அவ்வளவுதான்.. "அவனை அடிங்கடா.." என்று இவரை நோக்கி வருகிறார்கள்.. கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, சத்தம் அதிகமாகவே-பக்கத்து தெருவில் இருக்கும் தனக்கு தெரிந்த வார்டு உறுப்பினர் ஒருத்தருக்கு அலைபேசி அழைத்து வரச்சொன்னார்.

உடனே வந்த அவரிடமும் “ஏய்.. வந்துட்டாருடா நாட்டாமை” என்று தண்ணி பார்ட்டி இளைஞர்கள் வம்பு பேசிவிட, உடனே அவர் ரோந்து வந்து கொண்டிருந்த போலீசுக்கு தகவல் கொடுக்கிறார். போலீஸ் வந்ததும்... கொஞ்ச நேர விசாரணைக்குப் பிறகு ‘தண்ணி’யடித்திருந்த இளைஞர்களை ஜீப்பில்
ஏற்றிவிட்டு...


"யாருப்பா கம்ப்ளைய்ண்ட் பண்ணினது?"

உடனே சுதாரித்த வார்டு உறுப்பினர் நமது நண்பரை அழைத்து..

"சொல்லுப்பா.. என்ன நடந்தது?"

நம்ம ஆளு பாரதியார் வெறியன் வேறயா... ‘ஆஹா.. சமூகத்துக்கு ஒரு நல்லது செய்யறோம்’ என்று தன் மனதில் இருந்ததெல்லாம் கொட்டுகிறார்.

"வாரா வாரம் இதே கூத்துதான் சார். வாரா வாரம் சனி, ஞாயிறுல தண்ணி போட்டுட்டு ரகளை பண்றது, கேமரா செல்ல வெச்சுட்டு வெளில உட்கார்ந்து போற வர்றவங்களை படம் புடிக்கறது வேற..-ன்னு இவங்க பண்ற அட்டூழியம் கொஞ்ச நஞ்சமில்ல சார்.."

"சரி தம்பி, நீ என்ன பண்ற.. ஹவுஸ் ஓனரையும் கூட்டிட்டு ஸ்டேஷனுக்கு வா"


மணி இரவு இரண்டு! அந்த நேரத்தில் ஹவுஸ் ஓனரை எழுப்பி, அவரிடம் திட்டு வாங்கிக்கொண்டு ஸ்டேஷனுக்கு போகிறார்.

விடிகாலை நான்கு மணிவரை நடந்த பஞ்சாயத்து.. ஆயிரம் ரூபாயில் முடிந்திருக்கிறது. (அதாவது நம்ம ஹவுஸ் ஓனரிடம் ஆயிரம் ரூபாய் கேட்டிருக்கிறார்கள்!)

உடனே நமது நண்பர்..

"நாங்க கம்ப்ளைன்ட் பண்ண வந்தோம், நாங்க ஏன் பணம் குடுக்கணும்?"

"ஆங்? என்னப்பா தம்பி என்னமோ கேக்குறாரு?" என்று போலிஸ் கேட்டதும் பதறுகிறார் ஹவுஸ் ஓனர்..

"சும்மா இருப்பா.. நான் அந்த ஏரியால நிம்மதியா இருக்க வேண்டாமா? சும்மா தூங்கிட்டு இருந்தவனை கூட்டிட்டு வந்து மாட்டிவிட்டுட்டு, கேள்வி வேற கேட்குற..." என்று நம் நண்பரை அதட்டி விட்டு.. போலீசிடம்..

"அவ்வளவு பணமில்ல சார் இப்போ.."

"பரவாயில்ல.. நம்ம தம்பி இருக்காரில்ல.. இவர்ட்ட நாளைக்கு குடுத்து விடுங்க.." (நம்மாளுதான்!)

வெளியே வந்த போது தான் நம்ம நண்பருக்கு தெரிந்திருக்கிறது.. யார் மீது கம்ப்ளைய்ண்ட் பண்ணினாரோ அந்த இளைஞர்கள் ஏற்கனவே பேரம் படிந்து அறைக்கு போய்விட்டார்கள்!

"என்ன கொடுமை சார் இது?" என்று ஹவுஸ் ஓனரைப் பார்த்து கேட்டவருக்கு அடுத்த கொடுமை காத்திருக்கிறது..

"இந்தா ஐநூறு ரூபா.. நாளைக்கு வந்து குடுத்துடு"-என்கிறார் ஹவுஸ் ஓனர்.

"ஏன் சார்.. பணம் வெச்சிருக்கீங்கள்ல? குடுத்திருக்க வேண்டியதுதானே?"

"மூடிட்டு வா. உனக்கு அதெல்லாம் தெரியாது.."

அடுத்த நாள்.. ஞாயிறு..

காலை ஆறு மணிக்குதான் படுத்தாலும், வேறு வழியில்லாமல் ஒன்பது மணிக்கெல்லாம் எழுந்து (அந்த ‘அலப்பறை’ இளைஞர்கள் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்க..) ஸ்டேஷன் போய்.. பல குற்றவாளிகளுக்கு நடுவே.. சங்கடப்பட்டவாறே நின்று.. பேரம் பேசி காசைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்!

திரும்பி ரூமுக்கு வந்த போது.. அந்த இளைஞர்கள் சண்டே ஸ்பெஷல் மதிய உணவுக்காக.. சுதி ஏற்றிக்கொண்டிருந்தார்களாம்!

வாழ்க ஜனநாயகம்!


Thursday, May 15, 2008

குருவி - விமர்சனம்

May 15, 2008

ரொம்ப ரொம்ப ஆசையா குருவி ரிலீஸ் ஆன அன்னைக்கு நைட் ஷோ கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கி, தரணி -விஜய் கூட்டணியாச்சே-ன்னு பொண்டாட்டிய வேற கூட்டிட்டு போனா…

ஏன்பா இவங்க படம் எடுத்த பின்னாடி , போட்டு பாக்க மாட்டாங்களா? கில்லில - கபடி , ATM-ல running race, இதுல car race - லேட்டா வந்து ஜெயிக்கறது - ஏன் சார் இந்த கொடும? சரி படமாவது கொஞ்சம் பெட்டரா பண்ணிருக்கலாமே சார்? நாங்க என்ன பாவம் பண்ணினோம்? எப்படி எடுத்தாலும் பாப்பாங்கடா - இவங்க ரொம்ப நல்லவங்க-டா"ன்னு எடுத்திருப்பாங்க போல!

ஏன் விவேக் சார், இந்த கொடும நமக்கு வேணாம்னு தானே பாதி படத்துல நீங்க கழண்டுட்டீங்க? சரி நாமளும் அந்த மாதிரி போலாம் -னு interval ல கேட்டா, வெளிய விட மாட்டீனுட்டாங்க!

தரணி சார், ஒரு வேளை ரொம்ப tension-ஆகி தொலையுது -ன்னு படம் எடுத்தீங்களா? வேண்டாம் சார், ஒரு பேரரசு போதும் தமிழ்நாட்டுக்கு , இப்படி எல்லாரும் கிளம்பினா நாங்க எங்க போய் அழறது?

1. நல்லா யோசிச்சு பாருங்க, MALASIA ஷூட்டிங் தேவையே இல்ல. குருவி-ன்னு பேர் வெச்சதுக்காக விஜய்,விவேக்க மலேசியா அனுப்பி, திரும்ப அங்கிருந்து வந்து ...

2. அவ்ளோ பெரிய தாதா, பணக்காரன் கோட்சா -வோட தங்கச்சி flight travel பண்ணினதே இல்ல! . அப்படி flight travel கூட பண்ணாத ஒரு பொண்ணு, ஒரு பையனுக்காக தனியா சென்னை வருது. ரொம்ப சூப்பர் சார்!

3. By the way, "குருவியோட பாட்டு" ல 'ஏன் சாப்பாட்டில் உப்புகல்லு நீயடா, ஏன் வீட்டுக்கு செங்கல்லு நீயடா" ன்னு வருது. விஜய் வீட்டுக்கு ரசிகர்கள் செங்கல்லா இருக்கறதா? "நான் வீட்டுல நிம்மதியா இருப்பேன், நீ செங்கல்லா கஷ்டப்படு " ன்னு ஹீரோ பாடலாமா? Instead of that, உன் வீட்டுக்கு செங்கல்லு நானடா'-ன்னு எழுதி இருக்கலாமே!

வேற சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!