Friday, July 31, 2009

டென்ஷனா இருக்கு... ரொம்ப போரடிக்குது....

ஃபீஸ்ல அறிவழகன்-னு எனக்கு ஒரு ஃப்ரெண்ட் இருக்கான். வேலை ரொம்ப அதிகமா இருந்து, டென்ஷனா இருந்தாலோ.. போரடிச்சாலோ நானும் அவனும் ஏதாவது லூட்டி அடிச்சே அந்த டென்ஷனைத் துரத்திடுவோம். நாங்க பண்றது சீரியஸா-காமெடியான்னு இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது.

து ஆரம்பிச்சது மொதமொதல்ல தாமோதரன்ங்கற பையனோட கைங்கர்யத்துலதான். மூணு நாலு வருஷத்துக்கு முன்ன இருக்கும். தாமோதரன்கற பையன் எங்க எம்ப்ராய்டரி செக்‌ஷன்ல வேலை செஞ்சுட்டு இருந்தான். ஒரு செல்ஃபோன் வாங்கி அதுக்கு ஜிப் வெச்ச மாதிரி கவர் விப்பாங்களே அதைப் போட்டிருந்தான். எனக்கென்னவோ அந்த மாதிரி செல்ஃபோனை கவர் பண்ணினா பிடிக்காது. அதுனால அவனைப் பார்த்து ‘இதெதுக்குங்க’ன்னு கேட்டேன். அவன் நான் அந்த கவரைப் பார்த்த்தே இல்லைன்னு நெனைச்சு அவன் ‘சார்.. இந்த கவர் போட்டா ரொம்ப சேஃப் சார்’ன்னு ஆரம்பிச்சு அதோட மகத்துவங்களையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சான். நான் அவனை ஓட்டறதுக்காக ‘ஐ! இப்படியெல்லாம் கூட விக்கறாங்களா?’ன்னு கேட்டுட்டு இருந்தேன். அப்போ என்கிட்ட அறிவழகன் வந்து நான் தாமோதரனை ஓட்டறேன்னு புரிஞ்சுட்டு “டேய் கிருஷ்ணா.. இதப்பார்றா.. ஜிப் எல்லாம் வெச்சிருக்கு!”ன்னு அவனும் ஓட்ட ஆரம்பிச்சான். உடனே நானும் தாமோதரனைப் பார்த்து ‘எவ்ளோ பிஸிலயும் எப்படிங்க இப்படிப்பட்ட ஐட்டமெல்லாம் விக்கிறாங்கன்னு பார்த்து வாங்கீடறீங்க?’ன்னு கேட்டேன். அதுக்கும் அவன் தன்னைப் பத்தி பெருமையா எதோ பதில் சொன்னான். அப்புறம் நான் அறிவழகன்கிட்ட திரும்பி “நூறு நூத்தம்பதுரூபா வருமாடா இந்த கவர்?”ன்னு கேட்டேன். அறிவழகன் “போடா இங்க பாரு சார்ஜர் போடற இடத்துல ஓட்டை போட்டிருக்கு. ஐ.. இங்க பாருடா இயர் ஃபோன் மாட்டற இடத்துல கூட ஓட்டை இருக்கு. ரோப் மாட்ட ரிங் குடுத்திருக்காங்க. இவ்ளோ வேலை செஞ்சிருக்காங்க. நிச்சயமா இருநூறுரூபாக்கு மேல இருக்கும்”ன்னான். நாங்க சண்டை போட்டுட்டு இருந்தோம். தாமோதரன் ‘சார் வெறும் பதினைஞ்சு ரூபா சார்.. நம்புங்க சார்’ன்னு சீரியஸா சொல்லிகிட்டே இருந்தான். ‘போப்பா.. அவ்ளோ விலைன்னு சொன்னா நாங்க ஏதாவது நெனைப்போம்ன்னு நீ பொய் சொல்ற. ஜிப்பெல்லாம் கூட இருக்கு. அதெப்படிப்பா பதினைஞ்சு ரூபாய்க்கு குடுப்பான்’ன்னு அவனைப் பேச விடாம நாங்க மறுபடியும் 150, 200ன்னு பேசிப் பேசி அவன் பாவம் எங்களை விலக்கி விடற அளவு பண்ணினோம்.

இன்னைக்கும் யாராவது மாக்கானுக மாட்டினா ‘டேய் இன்னொரு தாமோதரன்டா’ம்போம். அவன் என்னதுன்னு கேட்டா ‘எங்களுக்கு தாமோதரன்னு ஒரு ஃப்ரெண்டு இருந்தார். ரொம்ப ஜீனியஸ். நீங்களும் அவரை மாதிரியே அறிவாளியா இருக்கீங்க’ன்னு சொல்லுவோம்.

ரு நாளைக்கு ரெண்டு பேருமா வெளில போக வேண்டி வந்தது. எப்பவுமே பைக்ல போகும்போது அவன் ஓட்டீட்டு போவான். (பைக்கை) நான் பின்னாடி உட்கார்ந்து ஐபாட்ல ஏதாவது பாட்டு போட்டுட்டு சத்தமா பாடீட்டே வருவேன். அவனும் கத்தி பாடீட்டே வருவான்.. ரோட்ல போறவங்களைப் பத்தி எங்களுக்கு கவலை இருக்காது. இந்த மாதிரி வந்துட்டு இருக்கறப்போ ஒரு வேன் போய்ட்டு இருந்தது. அந்த வேன் சடார்னு ப்ரேக் போட்டது. பார்த்தா ஒரு மொபெட்கார்ர் அந்த வேனுக்கு முன்னாடி க்ராஸ் பண்ணிருக்காரு. அவர் க்ராஸ் பண்ணி வந்து நின்னது - எங்களுக்கு ஜஸ்ட் சில இஞ்ச்கள் முன்னால. அறிவழகன் சடார்னு ப்ரேக் அடிச்சு ரொம்ப கோவமா திட்டறதுக்கு வாயெடுத்தான். நான் உடனே இறங்கினேன். நான் திட்டத்தான் போறேன்னு அவன் அமைதியா இருந்தான். டிவியெஸ்காரரை ரொம்ப எரிச்சலோட, சுத்தி இருக்கற ஆளுக பத்து பதினைஞ்சு பேர் பார்த்துட்டிருந்தாங்க. நான் இறங்கி நேரா அவர் மொபட் முன்னாடி நின்னு ‘கைகுடுங்க’ன்னு கை நீட்டினேன். அவர் முழிச்சாரு. ‘சும்மா கைகுடுங்க சார்’ன்னு சொல்ல அவர் கையை நீட்டினார். பிடிச்சு ரொம்ப அன்பா ஷேக் ஹாண்ட் பண்ணி ‘சூப்பர் ட்ரைவிங்’ன்னு பாராட்டி பைக்ல வந்து ஏறிட்டேன். கிளம்பும்போது அவர்கிட்ட சத்தமா ‘இது உங்களுக்கு செகண்ட் லைஃப். புதுசா பிறந்திருக்கீங்க.. அதான் கைகுடுத்தேன்’ன்னு சொன்னேன்.

ன்னொரு நாளைக்கு நான் என் பைக்லயும் அவன் அவன் பைக்லயும் வந்துட்டிருந்தோம். பாதி தூரம் வந்துட்டு இருந்தப்போ ‘என்னமோ மாதிரி இருக்குடா’ன்னான். ‘இப்ப என்ன மூடை மாத்தணுமா.. இரு’ன்னு முன்னாடி போன பைக்குக்கு ஒரு சைடு அவன் போகவும் நான் அந்த பைக்குக்கு வலது பக்கம் என் பைக்கை விட்டேன். (அதாவது எங்க ரெண்டு பேருக்கு நடுவுல ஒரு புதியவரின் பைக்!) அப்படி போனதும் நான் அந்தப் பக்கம் வந்துட்டிருக்கற அறிவழகனைப் பார்த்து ‘யோவ்.. அறிவில்லயா.. என்னய்யா ட்ரைவிங் பண்ற? எதுக்கு லெஃப்ட்ல சைடு வாங்கற?’ன்னு உரக்க திட்ட ஆரம்பிச்சேன். அறிவழகனுக்குப் புரிஞ்சுடுச்சு. அவனும் பதிலுக்கு கத்த ஆரம்பிச்சான். நடுவுல பைக்ல வந்தவர் எங்க ரெண்டு பேரையும் மாறி மாறி பார்த்துட்டு ஸ்பீடா போகப் பார்த்தார். நாங்க விடாம பைக் ஓட்டீட்டே வாக்குவாதம் பண்ணிட்டு வரவும் அவர் ‘விடுங்க சார் விடுங்க சார்’ன்னு ரெண்டு பேரையும் பார்த்து மாறி மாறி சொல்லிட்டு ஒரு கட்டத்துல எஸ்கேப் ஆகிட்டார். உடனே நாங்க வேறொரு பைக்காரரை செலக்ட் பண்ணி இதே மாதிரி பண்ணினோம். கிட்டத்தட்ட ஆறெழு பேர்.

இதோட க்ளைமாக்ஸ் நல்லா இருந்தது. எங்க ஆஃபீஸ் இருக்கற ரோட்ல வந்து இதே வேலையைச் செஞ்சுட்டே வந்தமா.. எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வந்தவர் என்னடா சண்டை போட்டுட்டே ரெண்டு பேரும் ஒரே கம்பெனிக்குள்ள போறாங்க’ன்னு நெனைச்சிடக்கூடாதுல்லயா... அதுனால அறிவழகனைப் பார்த்து ‘யோவ்.. என் பைக்கை இடிச்சியில்ல.. வாய்யா உள்ள வந்து எங்க ஓனரைப் பார்த்து பதில் சொல்லீட்டு போ’ன்னு அவனை கூப்ட்டேன். அவனும் ‘தப்பு உன்மேலதான். வா.. எங்க வேணாலும் வந்து சொல்லுவேன்’ன்னு சொல்லீட்டே பைக்கை உள்ளே விட்டான்.

பைக்கை ஸ்டாண்ட்ல போடும்போது அறிவழகன் தாங்க முடியாம சிரிக்க ஆரம்பிச்சான். அப்போதான் கவனிச்சேன். எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வந்தவரும் யாரையோ பார்க்க எங்க ஆஃபீஸ்தான் வந்திருக்காரு. அவரைப் பார்த்ததும் நான் சைகை காமிச்சேன். அறிவழகன் உடனே சுதாரிச்சுட்டு ‘வா.. மேனேஜரா.. ஓனரா.. யாரை வேணும்னாலும் கூப்டு’ன்னுட்டே எங்கூட வந்தான். அவரு எங்க ரெண்டு பேரையும் ஒரு மாதிரி பார்த்துட்டே செக்யூரிடிகிட்ட பாஸ் போட போனாரு.

ரெண்டுமூணு நாள் முன்னாடி நானும் அறிவழகனும் பயங்கரமா சிரிச்சுட்டே ஃபேக்டரிக்குள்ள போய்ட்டு இருந்தோம். எதிர்ல பார்த்தா அன்னைக்கு நடுவுல மாட்டிட்டு ஆஃபீஸ்க்கு வ்ந்த ஆளு. அன்னைக்கு இண்டர்வ்யூ வந்தாராம். ‘உள்ளதான் வேலைக்கு சேர்ந்திருக்கேன்’ன்னார். ‘ரெண்டு பேரும் அன்னைக்கு அவ்ளோ சண்டை போட்டுட்டீங்க?’ன்னு கேட்டார். ‘ஆமா சார். பஞ்சாயத்துக்கு ஓனர்கிட்ட கூப்ட்டு போனேன்ல.. பைக்ல சைடு மிர்ரர் உடைச்சதுக்கு இவன் காசு தரணும்னு வந்தது. பார்த்தா இவனுக்கு வேலையில்லைன்னு தெரிஞ்சது. உடனே ஓனர் இங்கயே வேலை செய். முதல் மாச சம்பளத்துல கழிச்சுக்கலாம்’ன்னாரு. இங்கயே வேலைக்கு சேர்ந்துட்டான். இப்போ ராசியாய்ட்டோம்’ன்னேன். அவரும் ‘ச்சே.. செம இண்ட்ரஸ்டிங்கா இருக்குங்க’னாரு.


இன்னொரு தாமோதரன்!



.

Wednesday, July 29, 2009

காதல் அழிவதில்லை

“டேய்... மகேஸ்வரி இங்கதான வரச் சொன்னா? மாத்தமில்லையே?” என்றான் ரமேஷ். என் நண்பன்.

கல்லூரியில் படிக்கும்போதே நான்கைந்து பேரைக் காதலித்து, அனைத்திலும் தோற்றிருந்தான் அவன். அதாவது அவனது காதலை யாருமே ஏற்கவில்லை.

வேண்டாம் இப்படிச் சொன்னால் அவனுக்கு மிகவும் கோவம் வரும்.

“போடாங்க..... முட்டைக்கண்ணியை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டான் ராஜா. இப்ப என்னாச்சு.. வாரா வாரம் நம்ம கூட சரக்கடிக்கறப்ப அவளை பேயி பிசாசுன்னு திட்டிகிட்டிருக்கான். நான் லவ் பண்ணின எந்தப் பொண்ணைப் பத்தி எவன் தப்பா பேசினாலும் வகுந்துடுவேன். அவ்ளோ லவ்வை இன்னும் எல்லார் மேலையும் வெச்சிருக்கேன் தெரிஞ்சுக்க.. என்னைப் போயி லவ்வுல தோத்தவன்னு சொல்லாதீங்க” என்பான்.

இவன் காதலித்த பெண்களைப் பத்தி யாரும் பேசக்கூடாதென்றால்.. எந்தப் பெண்ணைப் பற்றியும் யாரும் பேசக்கூடாதே என்று நினைத்துக் கொள்வேன்.

“என்னடா கேகே.... கேட்டதுக்கு பதிலே சொல்லல நீ? மகேஸ்வரி இங்கதான வரச்சொன்னா?” – என்றபடி என் நினைவைக் கலைத்தான் ரமேஷ்.

“ஆங்.. ஆமாடா.. மணி அஞ்சு ஆச்சு. இன்னும் காணோமே” என்றபடி.

ந்த இடத்தில் - நாங்கள் நிற்கிற இடத்திலல்ல. கதையில் இந்த இடத்தில் – மகேஸ்வரியைப் பற்றியில் சொல்லியாக வேண்டும். மின்னும் மாநிறத்தில் இருப்பாள். அருகிலுள்ள கல்லூரியில் பி.எஸ்.ஸி மூன்றாமாண்டு படிக்கிறாள். நாங்கள் வேலைக்குச் சென்று கொண்டிருந்த அலுவலத்தைத் தாண்டித்தான் தினம் சென்று கொண்டிருந்தாள் அவள். ஏதோ ஒரு நாள் அவளைப் பார்த்துத் தொலைத்துவிட்டான் ரமேஷ். அன்றைக்கு ஆரம்பித்தது எனக்கு..

“இதுவரைக்கு ஆறேழு பேரை லவ் பண்ணிருக்கடா நீ’ன்னு கிண்டல் பண்ணுவீங்களேடா.. ஏன் அந்த ஆறேழு பேரும் எனக்கு செட்டாவலன்னு இப்போதாண்டா தெரிஞ்சது”

“ஆறேழு பேரையும் செட் பண்ணிருந்தா அதுக்கு பேர் லவ்வாடா?” சிரிக்காமல்தான் கேட்க வேண்டும் அவனிடம். காதலைப் பற்றி பேசும்போது சிரித்தால் அவனுக்குப் பிடிக்காது.

“சும்மா இரு. இன்னைக்கு ஒரு பொண்ணைப் பார்த்தேன். வெள்ளைக் கலர் சுடிதார்ல..”

“சும்மா தேவதை மாதிரி இருந்தாளா?”

“டேய்... எப்படிடா இவ்ளோ கரெக்டா சொல்ற? பார்த்தியா?” என்றவனிடம்
“இதுதாண்டா அடுத்த டயலாக்.. எத்தனை வாட்டி கேட்டிருக்கேன் உன்கிட்டேர்ந்து.. பார்க்க வேற செய்யணுமாக்கும்?” என்று கேட்டேன்.

“ஆனா இவ நெஜமான தேவதைடா.. தேவதைங்கறதெல்லாம் கற்பனையில்லன்னு எனக்குத் தெரிய வெச்சவ” என்று ஆரம்பித்து வர்ணிக்க ஆரம்பித்தான்.

காதலிப்பவனுக்கு நண்பனாயிருப்பதன் கொடுமைகளை நீங்கள் உணரவேண்டுமென்றால் அப்படி இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் கோபிகிருஷ்ணனின் அம்மன் விளையாட்டு கதையைப் படியுங்கள். அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தான் ரமேஷ் என்னை.

எப்படியோ அவள் பெயர் வீடு விபரங்களையெல்லாம் சேகரித்தோம். ஒரு மாதத்துக்கும் மேலாக சரியாக அவள் வரும் நேரம் அலுவலகத்துக்கு வெளியே சென்று நின்று கொள்வான். சும்மாயிராமல் என்னை வேறு அழைத்துக் கொள்வான். ‘ரெண்டு பேரும் நின்னா அவ யார் நம்மளை லுக்கு விடறான்’னு அவ குழம்பீடுவா.. நீ மட்டும் போடா’ என்றாலும் கேட்க மாட்டான். அவள் அணிந்து வரும் உடையின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஏதோ ஒரு வண்ணம் இவன் உடையில் இருக்கிறதென்பான். அவள் எங்காவது பார்த்தால் ‘என்னைப் பார்க்க வெக்கப்பட்டு வேற பக்கம் பார்க்கறா பாரு’ என்பான். அவள் கையை எதற்காவது உதறவோ, அல்லது நண்பிகளோடு பேசும்போது தலையை சிலுப்பிக் கொண்டாலோ ‘ச்சே.. எனக்கும் இதே மேனரிசம் இருக்கு. கவனிச்சியா’ என்பான். ஒரு நாள் அவள் வளையல்கள் ஏதுமில்லாத கைகளோடு கடந்தாள். அன்றைக்குத்தான் இவனும் இவனது வாட்சை ஏதோ ரிப்பேருக்காகக் கொடுத்திருந்தான். அவ்வளவுதான். அன்றைக்கு முழுவதும் இதே பேச்சுதான். ‘எப்படிடா... எப்படி இதெல்லாம்..’ என்று உருகித் தள்ளிவிட்டான். அவள் வலது காலில் வலது செருப்பும், இடது காலில் இடது செருப்பும் போடுவது கூட தன்னைப் பார்த்துதான் என்று சொல்லும் நிலைமைக்கு வந்துவிடுவான் என்று எண்ணிக் கொண்டேன். அதற்கு முன் அந்த சம்பவம் நடந்தது.

ஏதோ ஒரு நாள் நான் எதேச்சையாக அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது மகேஸ்வரி எதிரே வந்து கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் நேராக என்னை நோக்கியே வந்து கொண்டிருந்தாள். நான் திரும்பிப் பார்த்தேன். அலுவலகத்தில் எங்கள் அறை ஜன்னலில் ரமேஷ் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். இவளெதற்கு என்னை நோக்கி வருகிறாளென நான் குழம்பிப் போயிருக்கும்போதே ‘நாளைக்கு அஞ்சு மணிக்கு முனிசிபல் காம்ப்ளக்ஸ் செல்வா ஃபேன்சி கடைக்கு முன்னாடி வாங்க’ என்று மட்டும் சொல்லிவிட்டு கடந்துவிட்டாள்.

கொஞ்சம் கலாச்சாரக் கந்தாயங்களையெல்லாம் மறந்து விடுங்கள். நண்பனின் காதலியைப் பற்றி இப்படியெல்லாம் சொல்கிறானே என்றெல்லாம் எண்ணாமல் இதைப் படியுங்கள். மகேஸ்வரி அருகில் வந்து பேசியபோதுதான் கவனித்தேன். எவன் சொன்னது சிவப்பு நிறம்தான் அழகென்று? மாநிறத்தில் அப்படியொரு தேஜஸ்வினியாயிருந்தாள். செதுக்கி வைத்த மாதிரி நச்சென்று இருந்தாள். அருகில் வந்து பேசிச் சென்றபோது வீசும் காற்றில் அவள் வாசத்தை விட்டு விட்டுச் சென்றிருந்தாள். கொஞ்ச நேரம் இப்படியே நின்றிருந்தால், நான் அவளைக் காதலித்திருப்பேன். அதற்குள் ரமேஷ் என் முதுகைத் தட்டிக் கொண்டிருந்தான். ‘என்னடா பேய் பிடிச்சவனாட்டம் நிக்கற? என்ன சொன்னானு நாலு வாட்டி கேட்டுட்டேன்’ என்றான்.

“நாளைக்கு அஞ்சு மணிக்கு செல்வா கவரிங்கிட்ட வரச்சொன்னாடா” இதை எழுத்தில் ஒரே வரியில் எழுதிவிட்டேன். ஆனால் சொல்லும்போது தந்தி அடித்த மாதிரித்தான் சொன்னேன்.

‘எப்படிடா.. எப்படி இதெல்லாம்?’ என்றபடி ரமேஷ் வானத்தில் பறக்க ஆரம்பித்திருந்தான்.

“கேகே.. வர்றாடா.. வர்றாடா” என் ஃப்ளாஷ்பேக்கை கலைத்தான் ரமேஷ். “எப்படி வர்றா பாருடா” என்றான். உண்மைதான் மஞ்சள் நிற சுடிதார். கருப்பு ஷாலை கழுத்துக்குச் சுற்றியிருந்தாள். எங்கள் அருகே வந்ததும் என்னை நேருக்கு நேராகப் பார்த்து “நீங்க மட்டும் கடைக்குள்ள வாங்க” என்றுவிட்டு அந்தக் கடைக்குள் நுழைந்தாள்.

ஏன் எதற்கு என்று கேட்கவோ, ரமேஷிடம் ஏதும் சொல்லவோ செய்யாமல் அவளைத் தொடர்ந்தேன்.

வாசகர்கள் நினைக்கும் எந்தத் திருப்பத்திற்கும் இடம் கொடுக்காமல் மகேஸ்வரி நேரடியாகவே விஷயத்தைப் போட்டு உடைத்தாள். “உங்க ஃப்ரெண்டு டெய்லி என்னைப் பார்க்கறதும், லீவு நாட்கள்ல கூட எங்க வீட்டுப் பக்கம் சுத்தறதும் வேண்டாம்ன்னு சொல்லுங்க” அடுத்த வார்த்தையை அவள் சொல்லும் இடைவெளியிலும் நான் எதற்கோ காத்திருந்தேன். அப்படியேதும் சொல்லவில்லை. நானும் எதையோ எதிர்பார்த்திருந்தேனோவென இப்போது உணர்கிறேன்! “அவர் பார்க்கறதெல்லாம் என்னால தாங்க முடியறதில்லைங்க. நேரடியா வந்து சொல்லவும் மாட்டீங்கறாரு. அதான் நானே சொல்றேன். நான் அவரை லவ் பண்றேங்க” – கடையில் ஏதோ ஒரு குழந்தை பலூனை உடைக்கும் சத்தம் கேட்டது. “போய் சொல்லுங்க. இனியாவது இப்படி திருட்டுத் தனமா பார்க்கற வேலையெல்லாம் வேண்டாம்னு சொல்லுங்க” இதைச் சொல்லும்போது அவள் கன்னங்களின் நிறமாற்றம் அவள் காதலைச் சொல்லிற்று.

ஒரு வாரத்துக்கு கொண்டாடினோம். அதற்குப் பிறகு எனக்குக் கொஞ்சம் ரமேஷிடமிருந்து விடுதலை கிடைக்கும் என்று நினைத்தேன். அதுதான் இல்லை.அவள் இதைச் சொன்னாள், அதைச் சொன்னாள் என்று போட்டு வறுத்தெடுக்கத் தொடங்கியிருந்தான். மகேஸ்வரி இவனை மிகப் புரிந்துவைத்தவளாயிருந்தாள்.

ஒரு வருடம் கழித்து மகேஸ்வரியின் வீட்டில் திருமணப் பேச்செடுக்க ஆரம்பித்தார்கள். தன் காதலைச் சொல்லிவிட்டாள். எதிர்பார்த்த எதிர்ப்பெல்லாம் இருக்கவில்லை. ரமேஷ்தான் வீட்டில் சொல்ல பயந்துகொண்டிருந்தான். மகேஸ்வரியின் தந்தையே ரமேஷின் வீட்டிலும் பேசி.. திருமணத்தை இனிதே முடித்து வைத்தார்கள்.

அவ்வளவுதான்.

இதெல்லாம் நடந்தது 12 வருடங்களுக்கு முன்.

சென்ற வாரம் ஊருக்குப் போயிருந்தபோது ரமேஷின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். “ஐ! கேகே... வா. வா..” என்றபடி மகேஸ்வரிதான் வரவேற்றாள். “அப்படியேதான்பா இருக்க நீ” என்றேன். சிரித்தாள். “ரமேஷ் இல்லையா?”

“குளிச்சிட்டிருக்காரு.. உட்காரு. டிஃபன் பண்றேன்... ராகவ்... கேகே அங்கிள் வந்திருக்காருடா” என்று தன் மகனின் அறை முன் நின்று சொல்லிவிட்டுச் சென்றாள். உள்ளேயிருந்து “அங்கிள் டென் மினிட்ஸ்ல வர்றேன்” என்று குரல் மட்டும் கேட்டது. கம்ப்யூட்டரில் இருப்பான்.

டீபாய் மீதிருந்த நாளிதழை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தேன். அப்துல்கலாமிடம் விமான நிலைய அதிகாரிகள் மன்னிப்பு கேட்க ஆரம்பித்திருந்தபோது “டேஏஏஏய்...” என்று முதுகில் தட்டியபடி அருகில் அமர்ந்தான் ரமேஷ்.

“எவ்வளவு நாளாச்சுடா பார்த்து” என்று விசாரித்துக் கொண்டிருக்கும்போது மகேஸ்வரி காஃபியுடன் வந்தாள்.

“ஐ!” கத்தினான் ரமேஷ். “மகேஸ்.. நீ க்ரீன் நைட்டி போட்டதை நான் கவனிக்கவே இல்ல. பாரேன் நானும் க்ரீன் கலர் டி ஷர்ட்தான் போட்டிருக்கேன்” என்று கத்தி என்னைத் திரும்பிப் பார்த்தான். “பார்த்தியா... எப்படிடா... எப்படி இதெல்லாம்...? ”

சில காதல்கள் அழிவதே இல்லை.



.

Tuesday, July 28, 2009

தொலைந்து போனவனின் தந்தை

விபத்து நடந்த சாலை


ற்றுமுன்னர்தான் அந்த
விபத்து நடந்திருந்தது.
யார் மீது தவறிருந்திருக்குமென
பலர் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
இறந்தவனுக்கு வயது 20 இருக்குமா,
25 இருக்குமா என்று சிலர்
விசனத்தில் இருந்தார்கள்.
கல்யாணமாகியிருக்குமாவெனவும்
சிலருக்கு சந்தேகம் இருந்தது.
இன்னொரு அடிபட்டவனை
ஆம்புலன்ஸ் ஏற்றிச் சென்றிருந்தது.
போலீஸுக்குத் தகவல் சொன்னவன்
இளைஞனாயிருந்தான்.
அவன்தான் இறந்தவனின் உடன் வந்தவனின்
அலைபேசியை வைத்திருப்பதாகச் சொன்னார்கள்.
அதில் பார்த்து
யாருக்காவது தகவல் சொல்லலாமென
பச்சை சட்டை அணிந்த ஒரு பெரியவர்
சொல்லிக் கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரத்தில் அந்த சாலை
நெரிசலதிகமாக ஆகியிருந்தது.
எனக்கு வீட்டுக்குச் செல்ல நேரமாகிவிட்டிருந்தது.



------------------------------------------




தொலைந்து போனவனின் தந்தை


தியாகராஜன் பனிரெண்டாவது படித்து முடித்த
அடுத்த வருடம் தொலைந்து போனான்.
அவனது சமீபத்திய புகைப்படம் கிடைக்காமல்
நாங்களெல்லாம் க்ரூப்பாக இருந்த புகைப்படமொன்றை
அவனது தந்தை வாங்கிப் போனார்.
அந்தப் புகைப்படத்தில்
தியாகராஜனின் தலைமேல்
சார்லஸின் கைவிரல்கள் கொம்பு போல இருந்தது.
எங்கெல்லாமோ தேடியும் அவன் கிடைக்கவில்லை.
அவன் வீட்டு நாய்
ஒரு வாரமாக சாப்பிடாமலிருந்தது.
பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு
சென்ற மாதம் அவனது தந்தையைப்
பார்க்கச் சென்றிருந்தேன்.
அவன் வீட்டு முன்னறையில்
அந்த க்ரூப் ஃபோட்டோ மாட்டப்பட்டிருந்தது.
அதில் நான் என்னைத்
தேடிக் கொண்டிருந்தபோது
‘வாப்பா கிருஷ்ணா’ என்றபடி வந்தார்
தொலைந்து போனவனின் தந்தை.




.

Monday, July 27, 2009

பெருமையாய் உணர்கிறேன்!

ன்று காலை செஸ் மோஹனப்ரியா குறித்து அடுத்த கட்டம் என்றொரு பதிவிட்டதைத் தொடர்ந்து பலர் மின்னஞ்சலில் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய வங்கிக் கணக்கு எண் கேட்டிருக்கிறார்கள்.

‘எங்களால் ஆன உதவி செய்கிறோம்’ என்ற அவர்களது மின்னஞ்சல் எல்லாவற்றிலும் பொதுவான அம்சமாக ‘எங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் விருப்பமில்லை’ என்ற வாசகம் இருந்தது.

ஒரு பதிவிட்டதன் மூலம் என்னால் இந்த உதவி செய்ய கிடைத்த வாய்ப்புக்காகவும், உதவும் குணம் படைத்த பல நண்பர்களைப் பெற்றதற்காகவும் பெருமிதமாய் உணர்கிறேன்!

இதோ அவர்களுக்கு உதவ... வங்கிக் கணக்கு எண்கள்:


AXIS BANK, NANGANALLUR BRANCH - 486010100038890 - J.SELVA KARTHIKA

INDIAN BANK, HARBOUR BRANCH, 432301825 - N. JAYACHANDHAR


உதவும் உள்ளங்களுக்கும், பக்க பலமாய் உள்ள மனங்களுக்கும் நன்றி!


.


அடுத்த கட்டம்

ஞாபகமிருக்கிறதா?

எல்லோர்க்கும் பெய்யும் மழை என்ற என் சென்ற வருடத்து பதிவில் செஸ் வீராங்கனை மோஹனப்ரியா பற்றியும் அவருக்கு நண்பர் அப்துல்லா செய்த உதவிகளையும் குறிப்பிட்டிருந்தேன்.


இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் அவர்?

“இந்த ஜூலை (2009) மாசம் நடந்த இரண்டு போட்டிகளில் - அதாவது - ஜுலை ஐந்தில் நடந்த 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியிலும், சென்ற ஞாயிறு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியிலும் மாநிலத்திலேயே முதலாவதாக வந்திருக்கிறார்” என்கிறார் ஜெயச்சந்தர். மோஹனப்ரியாவின் தந்தை.


“அப்துல்லாவின் உதவிகள் உங்களுக்கு பயனுள்ளதாய் இருந்ததா?”

“நிச்சயமாக. நீங்கள் முன்பே குறிப்பிட்டிருந்தது போல டைமர் கருவி கூட இல்லாமல் இரவல் வாங்கித்தான் போட்டிகளில் மோஹனப்ரியா கலந்து கொண்டிருந்தார். அப்துல்லா டைமர் கருவியும், பயிற்சி எடுத்துக் கொள்ள ஒரு மடிக்கணினியும் தந்து உதவினார்.

அதுமட்டுமில்லாமல் சில டோர்னமெண்டுகளில் அவள் கல்ந்து கொள்ளவும் ஸ்பான்சர்ஷிப் செய்தார்”



MOHANAPRIYA. J


"அதற்குப் பிறகு அவர் என்னென்ன ஜெயித்தார்?”

“நாக்பூரில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் தங்க மெடல் வாங்கினார். ஈரானில் நடந்த ஆசிய 14 வயதுக்குட்பட்டோரான போட்டியில் 4வதாக வந்தார். வியட்நாமில் நடந்த - கிட்டத்தட்ட 70 நாடுகள் பங்கேற்ற WORLD YOUTH CHESS CHAMPIONSHIPல் - 14வது இடத்தில் வந்தார்.

இதெல்லாம் போக Women International Master (WIM) ஆக மூன்று Norms பெற்றாக வேண்டும். மோஹனப்ரியா இரண்டு Norms பெற்றிருக்கிறார். இன்னொரு முக்கியமான விஷயம் - தமிழக அளவில் இதுவரை பெண்களில் யாரும் ஒரு Norm கூட பெற்றது கிடையாது. சமீபத்தில் Under 16, Under 19 இரண்டிலும் மாநில முதலாவதாக வந்திருக்கிறார்”


“படிப்பு?”

“அப்போது அவள் பத்தாவது படித்துக் கொண்டிருந்தார். ஆறுமாதம் பள்ளிக்கு செல்ல இயலாது. பல போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும். பல செஸ் வீரர்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் முகப்பேர் வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில்தான் படிக்கிறார். ஆறு மாதம் பள்ளிக்கு போகாததால் ஸ்பெஷல் கோச்சிங் எல்லாம் கொடுக்க வேண்டியதாயிற்று. படிப்புக்கு. அந்த செலவு வேறு. பிறகு மீண்டும் வந்தபோது செஸ் விளையாட்டில் இடைவெளியானதால் வார்ம்-அப் தேவைப்பட்டது. ஆகவே கிராண்ட் மாஸ்டர் கோச்சை ஏற்பாடு செய்து கிட்டத்தட்ட 30000 செலவில் மோஹனப்ரியாவிற்கு பயிற்சி அளித்தேன்”

“இதற்கெல்லாம் பண உதவி?”

“நானாகத்தான் செய்து கொண்டிருக்கிறேன். அவ்வப்போது சில ஸ்பான்ஸர்ஸ் கிடைத்தாலும் நிரந்தரமாக யாரும் ஸ்பான்ஸர் செய்ய முன்வரவில்லை. என் இரண்டாவது மகள் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அவளது படிப்புச் செலவு, குடும்பச் செலவுகளிடையே மோஹனப்ரியாவின் கனவை காய்ந்துவிடாமல் கொண்டு செல்வது பெரும்பாடாகத்தான் இருக்கிறது

தமிழ்நாடு செஸ் அசோசியேஷன் அவர்களுக்குட்பட்ட அளவில் உதவி செய்துகொண்டிருக்கிறார்கள் என்றாலும் அது போதுவதில்லை. உதாரணத்திற்கு மாநில அளவில் வெற்றி பெற்றால் - அடுத்த கட்டமாக - தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்ப அவர்கள் ஒத்துழைப்பார்கள். அப்படி செல்லும்போது ஒரு நாளுக்கான படியாக ரூ.100 கொடுப்பார்கள். அது போதாதில்லையா? அதற்காகத்தான் ஸ்பான்சர்சைத் தேட வேண்டியதாயிருக்கிறது”


“தற்போதைக்கு உங்களுக்கு என்ன உதவி தேவைப்படுகிறது?”

“16 & 19 வயதுக்குட்பட்ட போட்டிகளில் மாநில அளவில் முதலாவதாக வந்தார் அல்லவா.. அதன் அடுத்த படியாக அதே பிரிவுகளில் தேசிய அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 25-செப்.5 வரை மும்பையிலும், செப்டம்பர் 15 -25 கேரளாவிலும் நடக்க இருக்கிறது. இடையில் செப் 6-15 நாக்பூரிலும் ஒரு டோர்னமெண்ட் நடக்க இருக்கிறது. அதற்கான கோச்சிங்கிற்காக இருபதாயிரம், மற்றும் போக்குவரத்திற்காக முப்பதாயிரம் செலவாகும் என எதிர்பார்க்கிறோம். இப்போதைக்கு அதுக்கான ஏற்பாடுகளில்தான் இருக்கேன். எங்கிருந்தாவது உதவி வந்தடையும் என்ற நம்பிக்கையிருக்கிறது”

வாழ்க்கை ஒரு சதுரங்கம். நிச்சயமாக உங்கள் மகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வீர்கள் ஜெயசந்தர்!




.


Sunday, July 26, 2009

நர்சிம்முக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும்
இனிய நண்பர்




கார்ப்பரேட் கம்பர் நர்சிம்முக்கு






னி பிந்நாள் வாழ்த்துள்!



.

Saturday, July 25, 2009

தலையெழுத்து

ரு பூ மலர்வதுபோல

உறங்கும் குழந்தையின்
புன்னகை போல

ரயிலில் செல்லும்போது
வெளியே சிரிக்கும் சிறுவர்களின்
கையசைப்புக்கு அனிச்சையாய்
அசையும் கைபோல

அழகான பெண்ணொருத்தி
கடந்து செல்கையில்
திரும்பும் மனம்போல

அதுவாக ஒரு கவிதை
வந்து சேரும்வரை
இதுபோல ஏதோவொன்றை
எழுதிக் கிழிக்கவேண்டியதாகத்தான்
இருக்கிறது.




.

Friday, July 24, 2009

அவியல் 24.07.2009

கோவையில் இருந்து சென்ற வாரம் என் நண்பர் அழைத்து ஓர் அதிர்ச்சியைச் சொன்னார். அங்கே கோபாலபுரம் பகுதியில் (ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் சினிமா விநியோகஸ்தர்களெல்லாம் இருக்கும் பகுதி்) டாஸ்மாக்கிற்கு இவர் சென்றிருக்கிறார். உள்ளே வந்தவர்களிடமெல்லாம் நான்கைந்து கல்கி இதழ்கள்.

ஒரு சிலர் புத்தகத்தைக் கிழித்து கையைத் துடைக்கவெல்லாம் பயன்படுத்தியதைக் கண்டு கொதித்த இவர் என்னடா இது என்று நினைத்து வெளியே சென்று பார்த்திருக்கிறார். ஒருவர் கட்டுக் கட்டாக கல்கியின் சென்ற வார, அதற்கு முந்தைய என்று பல இதழ்களை வைத்துக் கொண்டு டாஸ்மாக் வருபவர்களிடமெல்லாம் இரண்டு, மூன்று என்று கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். நண்பர் விசாரித்தபோது அவர் சொன்னது..

“ரிட்டர்ன் எடுக்கறதில்லைங்க. இப்படி விநியோகம் பண்ணச் சொல்லீட்டாங்க”

அடப்பாவிகளா.. என்ன ஒரு பாரம்பரியமிக்க இதழ்! இப்படி டாஸ்மாக் முன்னாலா விற்பீர்கள்? ஒரு கல்லூரி முன்பாகவோ, டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலோ விற்கலாமே?

**********************************

ச் சின்னப்பையன் என்கிற சத்யா சென்ற ஞாயிறு கோவை வந்திருந்தார். திருப்பூர் பதிவர்கள் ஆளாளுக்கு முக்கியமான வேலைகளில் சிக்கிக் கொண்டிருந்த்தால் திருப்பூரிலே அவரை இறக்கி மதிய உணவு உண்டு அவரை கோவைக்கு பார்சல் செய்வதாக ஏற்பாடானது.



பதிவுகளில் செம ஹ்யூமரான ஆளுமையாக இருக்கும் சத்யா நேரில் கண்டிப்பான அதிகாரி போலத்தான் இருக்கிறார். ஆரம்பத்தில் பயந்து பயந்துதான் ஜோக்கடிக்க வேண்டியதாயிற்று. சந்திப்பில் சிவா (இவர்தான் சாருவின் புத்தகங்களில் வரும் திருப்பூர் சிவா), முரளிகுமார் பத்மநாபன், சாமிநாதன், வெயிலான் ஆகியோரும் இருந்தனர்.

வலையுலகின் தற்போதைய சூழல் குறித்து நீண்டதொரு அலசல் நடந்தேறியது. கடைசியில், இவற்றையெல்லாம் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று ச்சின்னப்பையன் அருமையான ஒரு தீர்வு சொன்னார்: அது என்னவென்றால்.. சரி.. வேணாம் விடுங்க..

வெயிலானின் பெருமைகளைப் பேசிக்கொண்டிருந்தார் சிவா.. 'அதனால்தாங்க அவர் திருப்பூர் வலைப்பதிவர் பேரவைத் தலைவர்’ என்றார் சாமிநாதன்.

‘அப்ப பரிசலை ஏன் செயலாளர்னு சொல்றீங்க?’

'அவர்தான் கொஞ்சமாவது ஆக்டீவா இருக்கார் அதுனால..' என்றார் வெயிலான்.

'சாமிநாதன் ஏன் பொருளாளர்?' என்று கேட்டார்கள்.

“சாப்பிட்டு முடிச்சு பில்லுக்கு பணம் குடுக்கும்போது தெரியும் பாருங்க’ என்றேன் நான்.

ஒவ்வொருமுறையும் வரும் விருந்தினர்களை உபசரிப்பதில் சாமிநாதன் முன்னிலையில் இருப்பதைப் பாராட்டும் விதமாக நானும் வெயிலானும் வரும் ஞாயிறு சாமிநாதனுக்கு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்ய இருக்கிறோம். ,

விருந்துக்கு தண்ணீர் பாட்டில்(அக்வாஃபீனா) வாங்கும் செலவை வெயிலானும், விருந்து முடிந்து பீடா வாங்கித் தரும் செலவை நானும் ஏற்றுக்கொள்வதாக ருமனதாக முடிவாகியிருக்கிறது. விருந்துக்கு வரும்போது மறக்காமல் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டை கொண்டுவருமாறு சாமிநாதனுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

****************************

கூகுள் சாட்டில் ஸ்டேட்டஸ் மெசேஜ் போடுவதில் பலர் கில்லாடியாக இருக்கிறார்கள். நான் எப்போதோ போட்டிருந்த ‘அஹம் ப்ரம்மாஸ்மி’ யைத்தான் இன்னும் வைத்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய அஹம் ப்ரம்மாஸ்மி-யைப் பார்த்து சாட்டில் வந்த ஒருவர் ‘அகம் ப்ரம்மாஸ்மின்னா புறம்?’ என்று கேட்டார். இன்னொருத்தர் ‘அஹம் சபனா ஆஸ்மி’ என்றுவிட்டுப் போனார். (இவர் யாரென்று சொன்னால் ஷாஆஆஆஆக்காய்டுவீங்க!)

எனக்கு நண்பர் நாடோடி இலக்கியனின் ஸ்டேட்டஸ் மெசேஜ் மிகப் பிடித்திருந்தது. ‘குழலினிது யாழினிது என்பர் என்னோடு பேசாதோர்’ என்று போட்டிருந்தார்.

ங்கொய்யால!

**********************************

ரிசஷன் படுத்தும் பாட்டைக் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது. சென்னையில் என் நண்பர் ஒரு நிறுவனத்தில் A.O.வாகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். ரிசஷன் சமயத்தில் தினமும் காலை நேராக வந்து செக்யூரிட்டி வாசலில் தன் வாகனத்தை நிறுத்துவார்.

செக்யூரிட்டியைப் பார்த்துக் கேட்பார்: “யாருப்பா இந்த கம்பெனில ஏ.ஓ?”

செக்யூரிட்டி: “சார்.... நீங்கதான் சார்” என்று ஒரு சல்யூட் வைப்பார்.

“அப்ப சரி” என்று வாகனத்தை உள்ளே செலுத்துவாராம்!

“என்ன பண்றது கிருஷ்ணா.. நாம இருக்கோமா இல்லையான்னு செக்யூரிட்டியைக் கேட்டு கன்ஃபர்ம் பண்ணிக்கறது நல்லதில்லையா” என்பார் நக்கலாக!

**************

மீரா பிறந்தநாளின் போது நடந்த நிகழ்விது. குடும்பத்தோடு புகைப்படம் எடுக்க கேமராவை செட் செய்து கொண்டிருந்தேன். மருமகன் ருத்ரேஷ் போஸ் குடுக்காமல் ஆடிக் கொண்டே இருந்தான். நான் LCDல் வ்யூ பார்த்தபடியே அவனிடம் ‘ருத்ரேஷ் இங்க பாருடா.. இங்க பாரு..’ என்று சொல்லிக் கொண்டே இருந்தேன்.

திடீரென்று ஓடிவந்து நான் பார்த்துக் கொண்டிருந்த கேமராவின் LCDஐப் பார்த்தபடி என் அருகில் நின்றான். ‘இங்கதான பார்க்கச் சொன்ன?’ என்பது போல. எல்லாரும் சிரித்துக் கொண்டிருந்தபோது அழகானதொரு புகைப்படம் வந்தது!

*****************************

என்னுடைய பெண்கள் ரசிக்கும் ஆண்களின் பத்து-க்கு ஆதியில் தாமிராவாக இருந்த ஆதிமூலகிருஷ்ணனின் எதிர்பதிவு கவிதை என்றால் நேற்றைக்கு நான் எழுதிய தலைப்பில்லாத கவிதைகளுக்கு நண்பர் பித்தன் எழுதிய எதிர்வினைக் கவிதைகள் எக்ஸலெண்ட் ரகம்! இதோ லிங்க். எழுதிவிட்டு எனக்கு மின்னஞ்சலிட்டு ‘தப்பா எடுத்துக்காதீங்க’ என்றதுதான் பிடிக்கவில்லை. நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் பாஸூ!

கவிதைகள் என்றதும் இன்றைக்கு ஸ்வாமி ஓம்கார் எழுதிய ஜோதிட கவிதைகளைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்.

நியூமராலஜி
------------------
என் வீட்டு நாய் குட்டியின் கழுத்தில்
பசு என எழுதி இருந்தது.

ஐயாயிரம் கொடுத்து என் பெயரை
மாற்றியது மனைவிக்கு பிடிக்கவில்லை.


இது சாம்பிள்! மற்றவற்றிற்கு இங்கே க்ளிக்குங்கள்!




.

Thursday, July 23, 2009

தலைப்பில்லாத கவிதைகள்

கூடத்தில் வானொலியில்
வழிந்து கொண்டிருந்தது நல்லதொரு
சங்கீதம்.

முற்றத்தில்

ஐந்தாறு மழலைகள்

உரக்கச் கத்தியபடி

விளையாடிக் கொண்டிருக்க

உள்ளிருந்து கேட்டது

அப்பாவின் குரல்-

‘எல்லாரையும் துரத்துடா.

கீர்த்தனை கேட்க விடாம

என்ன கூச்சல் இது’

நான் யாரையும் துரத்தவில்லை;

துரத்த மனமில்லை.

அப்பா வெளியே வந்து

‘சங்கீதத்தை

ரசிக்கத் தெரியாத ஜடமே’

என்றெனைத் திட்டிப் போனார்

மறுபடி மழலைகள்

கலகலவெனச் சிரித்தனர்


நான் ரசித்தேன்
உள்ளுக்குள் அப்பாவை நினைத்துச்

சிரித்தபடி.



(ஜூன் 1 – 1996 – மனோரஞ்சிதம் இதழில் வெளியானது)


***********************************

சேர்த்து வைத்த கவிதைகள்
எழுதி முடித்த பழைய டைரிகள்
எப்போதோ
உயிருக்குப் போராடி மீண்டு வந்தபோது
டாக்டர் தந்த ப்ரிஸ்க்ரிப்ஷன்
இறந்துபோன பாட்டியின் கடிதம்
நண்பர்களின் ஆட்டோகிராஃப்
இவற்றோடு
உன் நினைவுகளும்.
அவ்வப்போது
புரட்டிப் பார்க்க.

*************************************


‘உங்கள் கவிதை
என்னைக் கவர்ந்தது

அலுவலக மேஜைக்

கண்ணாடிக்கடியில்

அதை வைத்துள்ளேன்’

அறிவித்தார் நண்பர்.

எனக்கும் பிடித்த கவிதைகள்

எத்தனையோ உண்டு.

அப்படிப் பாதுகாக்க

எனக்கும்தான் ஆசை.

யார் தருகிறீர்கள் எனக்கு?

ஒரு வேலையும்-

கண்ணாடி வைத்த மேஜையும்?


(ஜூலை 94 உங்கள் ஜூனியரில் வெளியானது)

(இந்தக் கவிதை எழுத்தாளர் உமாசம்பத் அந்தக் காலகட்டத்தில் என் கவிதையொன்றைப் பாராட்டி எழுதிய கடிதத்தின் பாதிப்பில் எழுதி... வெளியானது)




.

Tuesday, July 21, 2009

பெண்கள் ரசிக்கும் ஆண்களின் 10!


1) பைக்கில வந்து, இறங்கிப் போகறதுக்கு முன்னாடி குனிஞ்சு கண்ணாடில முகம் பார்த்து அவசர அவசரமா தலைகோதுவீங்களே... அது பிடிக்கும்.

2) நீங்க போடற சாக்ஸ், உங்க PHANTக்கு மேட்சா இருக்கறப்போ உங்க பைக்ல உட்கார்ந்து இருக்கும்போதோ, படில ஏறும்போதோ ஷூவுக்கும் PHANTக்கும் இடைல கொஞ்சமா சாக்ஸ் தெரியுமே.. அதை ரசிப்போம்.

3) பைக் ஓட்டும்போது ஒரு சைட்ல சாய்ஞ்ச மாதிரி உட்காராம, கைய ரொம்ப அகட்டி ஹேண்டில பிடிக்காம நேரா உட்கார்ந்த மாதிரி ஓட்டறப்போ ஏதாவது திருப்பம் வந்தா திரும்பும்போது சைட் அடிப்போம்.

4) கார்ல போகும்போது ஜன்னல்ல ஒரு கைய வெச்சுட்டு, அந்தப் பக்கம் இருக்கறவர்கிட்ட சீரியஸா பேசிட்டு வர்ற போஸை விரும்புவோம்.

5) நீங்களும், உங்க ஃப்ரெண்டுமா பைக்ல போகும்போது, பில்லியன்ல உட்கார்ந்துகிட்டு ஃப்ரெண்டு தோள்ல ரெண்டு கையையும் வெச்சுட்டு அந்நியோந்நியமா போவீங்கள்ல அந்த போஸ் பார்க்க ரொம்ப விருப்பம் எங்களுக்கு. (அப்படிப் போகும்போது ஓட்டறவரை சைட் அடிப்பீங்களா, பின்னாடி உட்கார்ந்திருக்கறவரையா என்ற கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லை!)




6) சேர்ல உட்கார்ந்திருக்கும்போது கம்பீரமா கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கறதும், நாற்காலியோட (அ) டெஸ்க் (அ) பின்னாடி உள்ள மேஜையோட பின்பகுதில ரெண்டு கை முட்டியையும் வெச்சு உட்கார்ந்திருக்கறதும் பிடிக்கும்.

7) நாற்காலியை திருப்பிப் போட்டு அதன் சாய்மானத்துல முகம் வெச்சுட்டு பேசறது பிடிக்கும்.

8) பொண்ணுங்க க்ரூப்பா வரும்போது ஒண்ணுந்தெரியாத மாதிரி பம்மிகிட்டு போவிங்கள்ல அது பிடிக்கும்.

9) நாலஞ்சு பசங்க பைக்ல சாஞ்சுட்டு, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு போஸ் குடுத்துட்டு நின்னுகிட்டிருக்கறத ரொம்ப ரசிப்போம்.

10) பத்தாவது பாய்ண்ட்டா நிறைய வருது.. நேருக்கு நேர் பார்த்துப் பேசற பசங்க.., நாலைஞ்சு பேர் இருக்கறப்போ ரொம்ப ஹ்யூமரா பேசற ஒரு குறிப்பிட்ட பையன், கல்யாணவீட்ல இல்ல பொதுவான இடங்கள்ல ஒருத்தன் பிஸியா வேலை செஞ்சுட்டு இருப்பான்-பல பேர் அவனைச் சார்ந்து இருப்பாங்க-அந்த மாதிரி பசங்க... இது மாதிரி எக்கச்சக்கமா இருக்காம். உங்களுக்குத் தெரிஞ்சா நீங்களும் கொஞ்சம் சொல்லுங்க!


டிஸ்கி: அப்துல்லாவா.... ஆதிமூல கிருஷ்ணனா..? ரெடி ஸ்டார்ட் மீஜிக்!




.

Saturday, July 18, 2009

கிருஷ்ணகதா 18.07.09


ண்ணா.. வணக்கங்ண்ணா..

க்கா.. வணக்கங்க்கா..

ரொம்ப நாளாச்சு. எப்பயாச்சும் எழுதறதால ஒரு வணக்கம் போட்டுக்கலாமேன்னு...

சரி! இன்னைக்கு சின்னதா ஒரு கிருஷ்ணகதா!

ஏன் இவ்ளோ நாளா எழுதறதில்லைன்னா.. வேலைப்பளுதான் காரணம். வேலை கம்மியா இருக்கறப்போ எழுத சுதந்திரம் குடுத்திருக்கற முதலாளிக்கு வேலை அதிகமா இருக்கறப்போ வேலை செஞ்சு நன்றியைக் காட்ட வேணாமா?

அதுவுமில்லாம வீட்டுல சிஸ்டம் வைரஸாண்டவர் பிரச்சினையாலயும், ராம் பிராப்ளத்துலயும் மாட்டிருந்தது. நேத்துதான் ரெடியாச்சு. இனிமே அப்பப்போ வந்து பின்னி பெடலெடுத்துடுவோம்.

நிறைய பிரச்சினைகளைப் பார்த்தாச்சு இந்த கொஞ்ச நாள்ல. சும்மா இருக்கான் பாரு இவன்னு ரொம்ப பேருக்கு கேள்வி. சும்மா இருக்கறதவிட பெரிய எதிர்ப்பு இல்லைங்ண்ணா. உங்களைப் புரிஞ்சுகிட்டவர் உங்க மேல சொல்ற விமர்சனத்துக்காக நீங்க வருத்தப்படலாம். உங்களைப் புரிஞ்சுக்காதவன் உங்களை விமர்சனம் பண்ணினா, நீங்க என்ன சொன்னாலும் – உங்களைப் புரிஞ்சுக்காதவன் உங்க விளக்கத்தையும் புரிஞ்சுக்கப் போறதில்லை. அப்பாலிக்கா என்னாத்துக்கு கூவிகிட்டு? இதுதான் நான் எல்லாருக்கும் சொல்றது!

யார் வேணும்னா என்ன வேணும்னா பண்ணலாமா.. நாம கேள்விக் கேட்கக் கூடாதுங்கறீங்களா பரிசல்?

அப்படியில்ல. அப்படி அவங்க செஞ்சதுக்கு அவங்கதான் கடமைப்பட்டவங்க. அதுல நம்ம பங்கு ஒண்ணுமே இல்லை. எதிர்ப்பு காமிச்சு நாம ஒரு காலைத் தூக்கீட்டோம்னா...

இருங்க... இந்த காலைத் தூக்கறதுன்னு ஏன் சொல்றேன்னா...


முகமது நபிகள்கிட்ட அவரோட சீடர் அலின்னு ஒருத்தர் கேட்டார்:

“மனிதன் தான் விரும்பியபடி செயல்படக்கூடியவன்தானா.. அல்லது விதிக்குக் கட்டுப்பட்டுத்தான் எல்லாமே செய்து கொண்டிருக்கிறானா? எல்லாமே முன் கூட்டி தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்றால் எந்தத் தவறுக்கும் மனிதன் பொறுப்பில்லையே.. தான் விரும்பியதையெல்லாம் மனிதன் செய்ய முடியாதென்றால் அப்படிப் பட்ட மனிதப் படைப்பை படைக்காமலே போயிருக்கலாமே” – இப்படி ஆரம்பிச்சு கேள்வியா கேட்டுக் கிட்டிருந்தார்.


முகமது நபிகளோட ஸ்பெஷாலிட்டி என்னான்னா எதையுமே கேள்வி கேட்டவருக்கு ஸ்ட்ரெய்ட்டா புரியறா மாதிரி போட்டுத் தாக்குவாரு.

இப்படிக் கேட்ட அலியைப் பார்த்து நபிகளார் சொன்னார்:


“ஒன்னோட ஒரு காலைத் தூக்கு”

அலி உடனே இடது காலைத் தூக்கி ஒரு கால்ல நின்னாரு.

“சரி... இப்போ உன் வலதுகாலைத் தூக்கு”

அதெப்படித் தூக்கமுடியும்? அலிக்கு கோவம் வந்துடுச்சு.

அவர் முகம் மாறுவதைக் கண்ட நபிகள் சொன்னார்...

“இன்னாச்சுபா? இதான் மேட்டர்! உன் வலதுகாலை முதல்ல நீ தூக்கியிருக்கலாம். ஆனா நீ இடதுகாலைத் தூக்கின. அது உன் இஷ்டம். ஒரு கால்ல நில்லுன்னா நீ விரும்பின எந்தக் காலையும் தூக்க உனக்கு சுதந்திரம் இருக்கு. ஆனா முதல் கால் தூக்கப்பட்ட உடனே அடுத்தகால் பூமிக்கு கட்டுப்படுது. இல்ல நான் என்ன வேணா பண்ணுவேன்னு அந்தக் காலையும் தூக்கினா கீழதான் விழணும்”

ஒரு கால் எந்தக் கால்-ங்கறது நம்ம சுதந்திரம்ங்கற மாதிரி, முக்கியமான நேரங்கள்ல என்ன செய்யணும்கறது நம்ம சுதந்திரம். தப்பானத செஞ்சுட்டோம்னா அப்பறம் வேற வழியில்லாம அதுக்கு நாம கட்டுப்பட்டு விடுகிறோம்.

அதேபோல தேவையற்றதில் நாம் சம்பந்தப்பட்டால் உடனே சிக்கலில் மாட்டிக் கொண்டு தேவையானதை செய்ய முடியாமல் போய்விடுகிறது!

எது தேவையானது எது தேவையில்லாததுன்னு எப்படித் தெரிஞ்சுக்கறது?

அதுதான் சூட்சுமம்! வாழ்ந்துதான் பார்க்கணும்!


.

Monday, July 13, 2009

குசும்பனின் அத்துமீறலும், வடகரை வேலனின் சாஃப்ட்வேரும்

குசும்பன் இன்று காலை ஜ்யோவ்ராம் சுந்தர் பற்றி கண்ணியக்குறைவாக ஒரு பதிவெழுதியிருக்கிறார். எழுதி அவர் (இங்கே அவர் என்பது குசும்பனைக் குறிப்பிடுகிறது) படிப்பதற்கு முன்னமே அவரது சிஸ்டமே அதை டிலீட் செய்து விட்டிருக்கிறது!

இப்படி டிலீட் செய்யப்படும் பதிவை அவர் எப்படி அடிக்கலாம்? கொஞ்சமாவது காமன்சென்ஸ் வேண்டாமா? அடிப்பதற்கு முன்னால் யோசிக்க வேண்டாமா? சரி.. அடித்ததுதான் அடித்தார் அந்தப் பதிவை ஒரு வாரத்துக்கு வைத்து எங்களுக்கு தீனி போடாமல் உடனே எப்படி அவர் டிலீட் செய்யலாம்? - என்று மிகுந்த கோபத்தோடு விசாரித்தபோது ‘அப்படித்தான் டிலீட் செய்வேன்’ என்று முகத்திலறைந்தாற்போல சொல்லிவிட்டார்.

ஆகவே மிகுந்த கோபத்தோடு குசும்பனைக் கண்டித்து ஒரு பதிவெழுதினேன். PUBLISH POSTஐ அடித்தால் DELETE ஆகி விட்டது!

பிறகுதான் விசாரித்தேன்.. கீழ்க்கண்ட தகவல் தெரிந்தது.


வடகரைவேலன் அண்ணாச்சியிடம் UPDS என்றொரு சாஃப்ட்வேர் உள்ளது. அன்வாண்டட் போஸ்ட் டிலீஷன் சாஃப்ட்வேர். வீண் சர்ச்சைகளைக் கிளப்பும் பதிவுகளை நீங்கள் எழுதினீர்கள் என்றால் சிஸ்டத்தில் இருக்கும்போதே அந்தப் பதிவு டிலீட் ஆகிவிடும். என் டெம்ப்ளேட்டை மாற்றச் சொல்லி என் அட்மினிஸ்ட்ரேட்டரிடம் என் ப்ளாக்கர் கணக்கு விபரங்களைக் கொடுத்திருந்தேன். அவர் அந்த சாஃப்ட்வேரை என் அனுமதி இல்லாமலே என் ப்ளாக்கரில் இணைத்து விட்டார்.

ஆகவே எந்தப் பிரச்சினையான பதிவும் எழுத இயலாத கையறு நிலையில் இருக்கிறேன்.

அதற்குப் பதிலாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரார்த்தனைகளை செய்யலாம் என்று எண்ணுகிறேன்.

இன்றைக்கு...

ஜ்யோவ்ராம் சுந்தர் - ரோசா வசந்த் சண்டை தீர பிரார்த்திப்போமாக.


பி.கு: UPDS வேண்டுவோர் என்னுடைய ஐ சி ஐ சி ஐ வங்கிக் கணக்கில் பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.




.

Sunday, July 12, 2009

அள‌வில்லா ஆ******

சென்ற வாரம் அமைதியாக சென்றது. முதலில் திங்கள்கிழமையும், பின் செவ்வாய்கிழமையும் அதன் பின் புதன் கிழமையும்... இருங்க இருங்க. சரி இதை விட்டுடுவோம்.

ஆறாம் தேதி என் ந‌ட்ச‌த்திர‌ வார‌ம் தொட‌ங்கிய‌து. அடுத்து ஏழாம் தேதி வ‌ந்த‌து. அத‌ன் பின்.. அட‌ இருங்க‌ பாஸ்.. இதுக்கெல்லாம் கோச்சிக்கிட்டு ஓடினா எப்ப‌டி? இதையும் விட்டுடுவோம்.

ஒரு வாச‌க‌ர் ம‌ட‌லிட்டார். அட என்னப்பா நீங்க?.இது அதுவல்ல. நீங்க‌ ந‌ட்ச‌த்திர‌மா இருக்கிற‌ப்ப‌ இப்ப‌டி ஒரு புய‌ல் அடிச்சு ஓய்ஞ்சிருக்கே. அத‌னால் உங்க‌ ஆட்சி ச‌ரியில்லைன்னு சொன்னாரு. அதுச‌ரி. புய‌லை ப‌ரிச‌ல் ச‌மாளிக்க‌ முடியுமா?

என்ன‌தான் காரண‌ம் சொன்னாலும் வாய்ப்பை ச‌‌ரியாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌வில்லை என்ப‌து உண்மைதான். அத‌னால் என்ன‌ பாஸ்? ந‌ம‌க்கெல்லாம் எப்ப‌வுமே நட்ச‌த்திர‌ வார‌ம் தான். இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் ஆணிக‌ள் குறைந்து, நேர‌ம் கிடைத்து ந‌ம்மால் ஆன‌ டேமேஜை ப‌திவுகல‌கிற்கு செய்வேன் என்று உள‌மாற‌ உறுதி கூறுகிறேன்.

வாய்ப்ப‌ளித்த‌ த‌மிழ்ம‌ண‌த்திற்கு ந‌ன்றி.. ஆத‌ர‌வ‌ளித்த‌ த‌மிழ‌ர்க‌ள் ம‌ன‌திற்கும் ந‌ன்றி.


அள‌வில்லா ஆணிக‌ளுட‌ன்,
ப‌ரிச‌ல்கார‌ன்.

Saturday, July 11, 2009

தந்தை எனக்கெழுதிய கடிதம்!

அன்புள்ள கிருஷ்ணகுமாருக்கு...

உன் தந்தை பாசத்துடன் பாசத்துடன் எழுதிக்கொண்ட கடிதம்.
உனக்கு நன்றாகத் தெரியும் எனக்கு குழந்தைகளென்றால் மிகவும் பிரியம். எனது எல்லா உறவினர் வீட்டிலும் அந்த வீட்டுக் குழந்தையை நான் எடுத்து வைத்துகொண்டு இருக்கும் புகைப்படம் இருப்பதை நீ அறிவாய். மற்ற குழந்தைகளை நேசித்த நான் உன்னை எப்படி நேசித்திருப்பேன் என்பதை சொல்ல வேண்டியதில்லை! நீ குழந்தையாய் இருக்கும்போது என்னிடம் மிகவும் ஒட்டிக்கொண்டிருப்பாய். அதனால்தானோ என்னவோ பெரியவனாக, ஆக விலகிவிட்டாய்!

நானொன்றும் பெரிய வசதிபடைத்தவனில்லை. கொஞ்சம் பணம் சேர்ந்துவிட்ட காலத்திலும், சேர்த்திவைக்கத் தெரியாமல், எல்லோருக்கும் கொடுத்து நமக்கு தேவைப்படும்போது வெறும்கையோடு இருந்துவிட்டேன்! எங்கே - நீயும் அப்படி ஆகி விடுவாயோ என்கிற பயம் எனக்கு இருக்கிறது.
உனக்கு ஞாபகமிருக்கிறதா? நான் உடுமலை சேட்டு பெட்ரோல் பங்கில் கணக்கெழுதிக் கொண்டிருப்பேன். ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த நீ ஸ்கூலிலிருந்து வருவாய். நம்மிடம் அப்போது சைக்கிள் கூட இல்லை. வந்து என்னிடம் நோட்டு வாங்க காசு கேட்பாய். உன்னை வெளியில் நிற்கச் சொல்லிவிட்டு, நான் கொஞ்ச நேரம் கழித்து முதலாளியிடம் தயங்கித் தயங்கி கேட்டு, சம்பளத்திலிருந்து ஐந்து ரூபாய் வாங்கித் தருவேன். சில நாட்களில் அதுவும் முடியாமல், சரஸ்வதி ஸ்டோரில் என் பெயர் சொல்லி வாங்கிக் கொள்ளச் சொல்வேன். அப்பொழுதெல்லாம் உன்னைப் பார்க்கவே எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பன்னிரெண்டாயிரம் ரூபாயை ஒருமுறை உன்னிடம் கொடுத்துவிட்டு, டி.வி-யும், மிக்ஸியும் வாங்கிவரச் சொன்னபோது, அந்தப் பணத்தை உன் நண்பனொருவனுக்கு கொடுத்துவிட்டு, வெறுங்கையோடு நீ வீடு வந்ததும், இன்றுவரை அது திரும்பிவராமலே போனதும் உனக்கு எப்போதாவது ஞாபகம் வருமா?

நீ குழந்தையாய் இருக்கும்போதிலிருந்து, பத்தாவது படிக்கும் வரை நாம் முதலில் கூட்டுக்குடும்பமாக இருந்தோம். எல்லோரும் என்னை "பாலுமாமா" என்று கூப்பிடுவது போல், நீயும் என்னை "பாலுமாமா" என்றுதான் கூப்பிடுவாய். நீ "அப்பா" என்றழைக்கவேண்டும் என்று நான் விருப்பப்படுவேனோ என்று நீ என்றாவது எண்ணியதுண்டா?
ஆறாவது படிக்கும் போது என் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து, காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கி உன் புத்தகப் பெட்டியில் வைத்திருந்தாய். உன் மாமா அதைக் கண்டுபிடித்து என்னிடம் சொன்னபோதும், நான் உன்னை நேரடியாக கண்டிக்கவில்லை! உன்னை நான் அடித்ததாக எனக்கு நினைவிலேயே இல்லை. அதே போல உன்னை "டா" போட்டு நான் கூப்பிட்டதுமில்லை! நினைக்கும்போது எனக்கே ஆச்சரியமாகத்தானிருக்கிறது! ஒருவேளை உன்னை அடித்து, கண்டித்து வளர்த்திருந்தால் நீ இப்போதிருக்கும் நிலையை விட, நல்ல நிலைக்கு வந்திருப்பாயோ என்னவோ!

உனக்கு நான் அமைதியை கற்றுக்கொடுத்தேன். நீ எல்லோரிடமும் அளவுக்கதிகமாய் பேசிக்கொண்டிருக்கிறாய். நீ எத்தனையோ உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவன்தான். உன் சோம்பேறித்தனத்தால் எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கிறாய்.

ஓரிரு வருடங்களுக்கு முன் எனக்கு நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் கிடந்தபோது, வாரத்திற்கு ஒருமுறையேனும் நீ வருவாயென என் கண்கள் உன்னை எதிர்நோக்கும். உன் "பிஸியான" வேலைப்பளுவுக்கு நடுவிலே அது உன்னால் முடியாமல் போனது! ஒரு விருந்தாளியைப் போல் அவ்வப்போது வந்தாலும் - வந்தபோதெல்லாம் எனக்கு நீ செய்த பணிவிடைகளுக்காக என்னால் உனக்கு கொடுக்க முடிந்ததெல்லாம் என் புன்னகையை மட்டும்தான். அதைக்கூட நீ புரிந்துகொண்டிருப்பாயா என்று தெரியவில்லை.

என்ன செய்ய.. என்னதான் நீ உலகவிஷயங்கள் பேசினாலும் பெற்றவர்களைவிட வேலைதான் முக்கியம் என்றாகிவிட்ட இந்த இயந்திரச் சூழலில் - நீயும் ஒரு சராசரியாகிப் போனதில் எனக்கு வருத்தமிருக்குமா என்று நீ யோசித்ததுண்டா?

என்னைப்பற்றி இனி கவலைப் படாதே.. உன் அம்மாவையாவது அவ்வப்போது போய் பார்த்துக்கொள். திருப்பூரின் சபிக்கப்பட்ட வாழ்க்கை எனக்குத் தெரியுமென்றாலும்.. உன் முதலாளிகளுக்கு ஆயிரமாயிரம் பணியாளர்களுண்டு.. உனக்கு ஒரே அன்னைதான்! பிறகு வருந்திப் பயனில்லை. உன் தம்பி பாவம். அவனுக்கு கடைசிவரை நானிருப்பேன் என்ற உறுதிமொழியை எனக்குக் கொடு.. இதைச் சொல்வதற்காக வருந்தாதே.. ஒருவேளை உனக்கு அக்காவோ, தங்கையோ இருந்திருந்தால் அவர்களை கரையேற்றியிருப்பாயா என்பது எனக்கு சந்தேகமே. ஏனென்றால் நீ எப்போதுமே உனக்காக மட்டுமான ஒரு உலகத்தில்தான் இருக்கிறாய்!
வேலை வேலை என்றிருந்து பத்திரிகைகளுக்கு எழுதிப்போட நேரமில்லாதிருந்த நீ இந்த வலையுலகத்தில் எழுதத் துவங்கியது குறித்து மிக்க மகிழ்ச்சி! நிறைய எழுது. அதற்காக தூக்கத்தை கெடுத்துக்கொள்ளாதே. உன் உடம்பைக் குறித்து உனக்கு அக்கறை இருப்பதே இல்லை. தயவுசெய்து நேரத்திற்கு உண்டு, உறங்கி உடம்பை பார்த்துக்கொள். இதை உனக்காகச் சொல்லவில்லை. என் பேத்திகளுக்காக சொல்கிறேன்!

நேற்று தந்தையர் தினத்தில் எனக்காக ஏதாவது பதிவு போட்டிருப்பாய் என நினைத்தேன். ஏதோ குட்டிக்கவிதைகள் போட்டிருக்கிறாய். அதனாலென்ன நான் உன்னை தப்பாக நினைக்கவா முடியும்? (அந்த நாலாவது கவிதை உண்மையில்லையே?) அன்னையரைக் கொண்டாடும் அளவுக்கு, இங்கே தந்தையரை யாரும் கொண்டாடுவதில்லை!

உன் அம்மா, தம்பியைப் பார்த்துக்கொள். உமா, மீரா, மேகாவுக்கு என் ஆசிகள் எப்போதும் உண்டு!

மற்றபடி...
இங்கே சொர்க்கத்தில் யாவரும் சுகம்!

அன்புடன்...
உன் அப்பா.

Thursday, July 9, 2009

அவியல் (09.07.09)

முத்திரை படத்தின் ஐஸ் ஜோக்கைப் போலவே கடந்த வாரம் ஒன்று நடந்தது. என் மகள்களை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கூடம் போகும்போது அன்றைய நாளிதழ் வாங்க மறந்தது நினைவுக்கு வந்தது. என்னைப் பார்த்தாலே நான் வாங்கும் நாளிதழ்களை கடைகாரர் கொடுத்தனுப்புவார் என்பதால், வழக்கமான கடையில் நிறுத்தி, பைக்கில் அமர்ந்தவாறே மேகாவை மட்டும் இறங்கச் சொல்லி 'போய் பேப்பர் வாங்கீட்டு வா’ என்றேன். மேகா இறங்கியவாறே கேட்டாள்:

“ரூல்ட் பேப்பரா அன்ரூல்ட் பேப்பரா ப்பா?”

***********************

ரண்டு தினங்களுக்கு முன் ஸஸி என்றொரு நட்பைப் பற்றிய பதிவு எழுதியிருந்தேனல்லவா? அதைப் படித்த என் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் முருகேசன் என்பவர் ஒரு ஆச்சர்யமான விஷயம் சொன்னார். அவரும் அவரது இரண்டு நண்பர்களுக்கும் ஒரே பெயர் – முருகேசன். மூவரின் மனைவிகளின் பெயரும் செல்வி. “ஆனால் இது பேசிக் கொண்டெல்லாம் செய்யவில்லை. அதுவாக நிகழ்ந்தது. இன்றைக்கும் வருடத்துக்கு மூன்று நான்கு முறை சந்தித்துக் கொள்வதுண்டு” என்றார்.

சபாஷ்!

******************************

திமூலகிருஷ்ணனின் கதை ஒன்று விகடனில் வெளிவந்திருந்தது. அழைத்துச் சொன்னார். “பரிசல்.. உங்களையும் நர்சிம்மையும் முந்திட்டேனே” என்றார். புரியவில்லை. கேட்டதற்கு சொன்னார். ‘உங்களுது 26ம் பக்கம் வந்தது. நர்சிம்முது 91ம் பக்கம் வந்தது. என்னோடது 19ம் பக்கம்ல?’ என்று கெக்கலித்தார்.

அடக் கடவுளே என்று இதை நர்சிம்மிடம் சொன்னபோது அவர் சொன்னார்

“உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? முக்கால்வாசிபேர் விகடனை பின்னாலிருந்துதான் படிப்பாங்க”

அதுசரி! நல்லாதான்யா சோடி போட்டுக்கறாங்க!

********************

ந்து ரொம்ப நாளானாலும் ‘குளிர்’ படத்தில் சிம்பு பாடிய ‘மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன்’ பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. தற்போது ‘வாமனன்’ பாடல்கள்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ‘ஏதோ செய்கிறாய் எனை ஏதோ செய்கிறாய்’ பாடல்களின் இடையே யுவனின் இசை விளையாட்டு அபாரம். விஜய் ஏசுதாஸின் குரலில் ‘யாரைக் கேட்பது’ நல்ல மெலடி இருந்தாலும் ‘ஒரு தேவதை பார்க்கின்ற நேரமிது’தான் அதிக முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். ரூப்குமார் ரத்தோடின் குரல் வித்தியாசமாகத்தான் இருக்கிறது என்றாலும் இதையே ஹரிஹரன் பாடியிருந்தால் இன்னொரு ‘வெண்மேகம் பெண்ணாக’ கிடைத்திருக்கும்.

******************************

ல்யாணங்களுக்குப் போனால் மொய் கவரில் வித்தியாசமாக வாழ்த்துகள் எழுதிக் கொடுப்பது என் வழக்கம். எனக்கு மட்டும் எழுதிக் கொள்ளாமல் கூட வரும் நண்பர்களின் மொய் கவரையும் வாங்கி (காசு போடுவீங்களா-ன்னு கேட்கக் கூடாது!) வித்தியாசமான வாசகம் எழுதிக் கொடுப்பேன். சமீபத்தில் ஒரு கல்யாணத்துக்கு அதே மாதிரி எழுதிக் கொடுக்கும்போதுதான் கவனித்தேன்.

மொய் எழுதும் மகராசன்கள் பெயரை மட்டும் பார்த்து, கவரைக் கசக்கிப் போட்டு பணத்தை எண்ணி நோட்டில் எழுதிக் கொண்டிருந்தார்கள்.

பணத்தோடு எங்கள் வாழ்த்துகளையும் தெரிவியுங்கள் எசமானர்களே என்று சொல்லிவிட்டு வந்தேன்.

****************

மீபத்தின் அரசியல் ஸ்டண்டுகளில் மிகக் கவர்ந்தது கலைராஜன் – எஸ். வி. சேகர் சண்டைதான். ‘எஸ்.வி.சேகர் பன்றிகாய்ச்சல் வந்து இறந்தாலும் என்னைக் குற்றம் சொல்லுவார்’ என்று கலைராஜன் சொன்னதுக்கு ஒரு நிருபர் ‘அத்தனை நோயிருக்க பன்றிக்காய்ச்சலை ஏன் சொன்னீர்கள்?’ என்று கேட்டார். (நல்ல கேள்வி!) கலைராஜனோ ‘அதுதானே ஒரு இடத்தில் நிற்காமல் அங்கே இங்கே என்று அலைகிறது. அதனால்தான்’ என்றிருக்கிறார்.

அடுத்ததாக நிருபர் போனது எஸ்.வி.சேகரிடம். ‘கலைராஜன் உங்களை பன்றிக்காய்ச்சல் வந்து சாவார் என்று சொல்லியிருக்கிறாரே’ என்று கேட்டிருக்கிறார். எஸ்.வி.சேகர் சொன்னாராம். ‘அதெல்லாம் வராது. ஒருவேளை கலைராஜன் என்னைக் கடித்தால் வரலாம்’

நல்லாதான் பேசிக்கறாங்கய்யா மக்கள் பிரச்சினையை!

*************************

திவரும் நண்பருமான ராமன் வெய்ட் லாஸுக்கு ஒரு வகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னொரு நண்பர் சாமிநாதன் சென்று அவரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு விஷயம் சொன்னார்.

‘ஹாங்காங்கில் எடையைக் குறைக்க எக்ஸ்ட்ரா கொழுப்பு இருக்கும் இடத்தில் ஒரு ஆய்ண்ட்மெண்டை தடவி தீயால் கொளுத்திவிடுவார்களாம். அந்த இடத்தில் கொழுப்பு முழுவதும் கரைந்து விடுமாம். அப்புறம் எடை குறைந்துவிடுமாம்.

“இப்படிப் பண்ணினா நம்ம வெய்ட்டே தெரியாதுங்க. ரொம்ப லேசா தெரியுமாம்” என்றார் சாமிநாதன் வெகு சீரியஸாக.

நான் கேட்டேன்… “கரெக்ட்தான். தீ நல்லா எரிஞ்சா நம்ம வெய்ட்டு நமக்கு தெரியாதுங்க. தூக்கறவனுக்குத்தானே தெரியும்?”

**************************

நேற்றைக்கு என் மகளின் பிறந்தநாளை ஏன் சொல்லவில்லை, பதிவெழுதவில்லை என்று பல மிரட்டல்கள். வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு நன்றி. நட்சத்திரம் ஆனாலும், பிறந்தநாள் ஆனாலும் எல்லாருக்கும் நான் சொல்லிக் கொள்வது முதல் பதிவு/அன்றைய பதிவு ‘நான் இந்த வார நட்சத்திரம்’ அல்லது பிறந்தநாள் என்று மட்டும் போடுங்கள். இரண்டு மூன்று மணிநேரம் கழித்து பதிவு போட்டுக் கொள்ளலாம். என்ன எழுதினாலும் ‘வாழ்த்துகள்’ என்ற பின்னூட்டம்தான் அதிகம் வரும்.

இதைக் குறித்து ஒரு பிரபல பதிவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். “நான் 200வது பதிவுக்கு ஒரு ஐடியா வெச்சிருக்கேன். நான் ஒரு பொண்ணை சந்திக்கறா மாதிரியும்.. அவ என் பதிவுகள் பத்தி பேசிகிட்டே வர்றா மாதிரியும்….” என்று ஆரம்பித்து சொன்னார். அபாரமாக இருந்தது. “சூப்பர் பாஸு! செம ஃபார்ம இருக்கீங்க.. எழுதுங்க.. கலக்குங்க” என்றேன். ‘ங்கொய்யால.. இது என் 200வது பதிவுதான். நான் எழுதி வந்துடுச்சு. அங்க வந்து படிக்காம வெறும் வாழ்த்துகள் சொல்லீட்டு பேச்சைப் பாரு’ என்றார்.

வழித்த அசடை துடைத்துக் கொள்ள வெகுநேரமானது.

***************************

அவியலில் அக்டைசியில் ஏதாவது கவிதையைக் குறிப்பிடுவது வழக்கம். இன்றைக்கு கவிதைக்கு பதில் கவிதைகளைப் பற்றி..

நேற்றைக்கு நான் எழுதிய கவிதைகளைப் படித்து ஒரு பதிவர் அலைபேசினார். ‘நீங்க மொதல்லயே கவிதையெல்லாம் எழுதியிருக்கீங்களா.. எனக்கு அவ்வளவா வராது’ என்றெல்லாம் சொன்னவர் அடுத்து சொன்னார். “நீங்க எழுதினதுல சிலது சூப்பர். ஒண்ணு சுமார்தான்” என்றார். “ஏன் சுமார்?” என்று கேட்டதற்கு “அந்தக் கவிதை எனக்கு படிச்ச உடனேயே புரிஞ்சுடுச்சுங்க” என்றார். நம்புங்கள்.. இதை அவர் வெகு சீரியஸாகச் சொன்னார்!

ஜ்யோவ்ராம், அனுஜன்யா போன்றவர்கள் ‘நேற்றைய கவிதையின் விளக்கம்’ என்று எழுதும் கவிதைக்கு அடுத்த நாள் விளக்கம் போட்டு இவருக்கு பதிலடி கொடுக்க வேண்டுகிறேன்!


.

Tuesday, July 7, 2009

ஸஸி

னக்கு ஸஸியைப் பழக்கமானது இன்னொரு நண்பனான வேலுச்சாமி மூலம்தான். என்னவோ ஆரம்பத்திலேயே அவன் ரசனையும் என் ரசனையும் ஒத்துப் போனது என்றெல்லாம் சொல்லமாட்டேன். அவனுக்கு கமலஹாசனைத் தான் பிடிக்கும். எனக்கு ரஜினி என்று வேறுபாடுகள் இருந்தனதான். ஆனாலும் அவன் என்னவோ எனக்கு நெருக்கமானவனான ஆனான்.

உடுமலைப்பேட்டையில் இருந்தபோது ஸஸி அவனது அண்ணனின் ஜனனி ஆர்ட்ஸில் அவரோடு சேர்ந்து வரைந்து/எழுதிக் கொண்டிருந்தான். அந்த ஐடியா இந்த ஐடியா என்று பேசிப் பழகி இருவருக்குள்ளும் நெருக்கம் வளர ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் அவனோடு வேறு யாராவது பேசினால் கோவம் வந்தது. அவனுக்கு கவிதைகள் எழுதினேன். அவனே ‘என்னடா பண்ணினேன் நான் என் மேல இவ்ளோ பாசமா இருக்க’ என்றெல்லாம் கேட்க ஆரம்பத்தான்.

அந்த சமயத்தில் ஒரு வதந்தி உலா வந்தது. ஒரு குறிப்பிட்ட நாள் நள்ளிரவோடு உலகம் முடிந்துவிடப்போகிறது என்று. நானும் அவனும் ’ ‘அப்படி ஆச்சுன்னா நான் உன்கூடதான் இருப்பேன்’ என்றெல்லாம் பேசிக் கொண்டோம். அந்தக் குறிப்பிட்ட நாளில் அவன் இந்தியா சில்க் ஹவுஸ் விளம்பர பேனர் வேலைகளுக்காக திருப்பூர் சென்று தங்கியிருந்தான். நான் அங்கே இங்கே காசு கடன் வாங்கி உடுமலையிலிருந்து கிளம்பி திருப்பூர் சென்று அன்றிரவு அவனோடு தங்கினேன். காலையில் கண்விழித்தபோது சுற்றிலும் குஷ்பூவும், சுகன்யாவும் சிரித்துக் கொண்டிருக்க ‘நாம் இருக்கறது சொர்க்கமா நரகமா’ என்று ஆராய்ந்தபோது பெய்ண்டை முகத்தில் கொட்டி ‘எழுந்திருடா நாயி’ என்று திட்டியபோதுதான் உலகமெல்லாம் அழியவில்லை. இன்னும் நிறைய சந்திக்க வேண்டியிருக்கிறது என்று புரிந்தது.

அவனும் நானும் இன்னொரு நண்பரான நாகராஜும் (பாக்யா ஆர்ட்ஸ்.. இப்போது பாரதி ஆர்ட்ஸ்) சேர்ந்து பாண்டிச்சேரி சென்றோம். முதல்முதலாக நான் வெளியூருக்கு நண்பர்களோடு சென்றது அதுதான். அங்கே பாலாஜி தியேட்டரில் பலான படம் போடுவார்கள் என்று கேள்விப்பட்டு அங்கே சென்றோம். அதுக்கேண்டா அங்க போனீங்க என்று கேட்பீர்களானால்…

ஸஸி உடுமலையில் எல்லா தியேட்டர்களிலும் ஆர்ட்ஸ் வேலை செய்யவதால் எல்லாரையும் பழக்கப் படுத்திக் கொண்டு இந்த மாதிரி அஜால் குஜால் படங்களுக்குப் போய்ப் பார்த்துவிடுவான். எனக்கு உடுமலையில் அந்த மாதிரிப் படங்களை போஸ்டரில் ஓரக்கண்ணால் பார்ப்பதற்கே பயமாக இருக்கும். ஒரு படமாவது பார்க்க வேண்டுமென்பது என் லட்சியமாக இருந்தது.

ஒரு வழியாக ரிக்‌ஷாக்காரர் அந்த தியேட்டரை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது நேரமாகி அதற்குப் பதில் வேறு ப்ரோக்ராமை ஏற்படுத்திக் கொண்டு அதை கேன்சல் செய்தோம். பாண்டிச்சேரியைப் பற்றி இங்கே குறிப்பிடக் காரணம் அங்கேதான் நாங்கள் மூவரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டோம்.

“நாம மூணு பேரும் இப்படியே இருக்கணும். கல்யாணமானாலும் மூணு பேரும் ஒரே காம்பவுண்ட்ல வீடு பார்த்து போகணும். (வீடு கட்டணும் என்று கூட சொல்லத் தெரியவில்லை அப்போது!) நாம எப்படி ஃப்ரெண்ட்ஸா இருக்கமோ, அதே மாதிரி ஃப்ரெண்ட்ஸா இருக்கற மூணு பேரை செலக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கணும்” - இப்படிப் போனது அந்த ஒப்பந்தம்.

அங்கிருந்து வந்து உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே ஒரு ஃபோட்டோ ஸ்டுடியோவில் மூவருமாக க்ரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம். ‘ஸ்டூடியோவுக்குள்ள வேண்டாம்ணா. வெளில வந்து எடுங்க. வித்தியாசமா இருக்கணும்’ என்று சொல்லி வெள்ளை சுவர் பிண்னணியில் எடுத்த அந்த புகைப்படத்தில் மூவரும் ஒரே மாதிரி கைகட்டிக் கொண்டதால் போலீஸ் ஸ்டேஷனில் எடுக்கப்பட்ட மாதிரி ஆனது வேறு கதை!

தற்குப் பிறகு நடந்ததெல்லாம் வேறு..

எனக்கு திருமணம் நடந்தபோது ஸஸியோ நாகராஜோ என்னுடன் இல்லை. அதே மாதிரிதான் மற்ற இருவருக்குமே. ஸஸியும் என்னைப் போலவே கந்தர்வ கல்யாணம் செய்து கொண்டான். ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை என வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டான்.

சென்ற மாதத்தில் “ஜூலை 2 குழந்தைகளுக்கு காதுகுத்து வெச்சிருக்கேன்” என்று அழைப்பிதழோடு வந்தான். ஸ்டிக்கர் பொட்டை கம்மல் மாதிரி ஒட்டி வித்தியாசமாக அழைப்பிதழை வடிவமைத்திருந்தான். மேடைக்குப் பின்னால் பேனர் வைக்க “ஆசைக்கு ஒண்ணு ஆஸ்திக்கு ஒண்ணு”ன்னு எழுதவா என்று கேட்டு என்னிடம் திட்டு வாங்கிக் கொண்டான்.

அப்பேர்ப்பட்ட ஸஸியின் குழந்தைகள் காதுகுத்துக்கு நான் போகவில்லை. தேதியை மறந்துவிட்டேன் என்ற உண்மை இந்த இடத்தில் இந்தப் பதிவை புனைவாக மாற்றும் அம்சமாக ஆக்கிவிடுகிறது. ஆனால் அதற்குப் பிறகு அவன் அழைத்துப் பேசியது புனைவை விட சுவாரஸ்யம்.

அதே ஜூலை 2 மாலை அவன் அழைப்பு வந்தபோதுதான் “ஐயையோ எனப் பதறினேன். என்ன சொல்வது என்று தெரியாமல் ‘கொஞ்சநேரம் கழிச்சு கூப்பிடறேண்டா’ என்று கட் செய்துவிட்டு ‘மறந்துவிட்டேன் என்ற உண்மையைச் சொல்லிவிடலாம்’ என்று அடுத்த நாள் தயக்கத்தோடே அலைபேசினேன்.

எடுத்த உடனே “மன்னிச்சுக்கடா... என்னாச்சுன்னா” என்று ஆரம்பித்தவனை இடைமறித்தான்.

“ஏன் வர்லன்னு கேட்க கூப்பிடலடா.. ஏதாவது வேலை இருந்திருக்கும் விடு. நான் கூப்டது… ஆடித்தளுபடிக்கு குறிஞ்சி சில்க்ஸுக்கு நோட்டீஸ் அடிக்கணும். கலக்கலா ஒரு மேட்டர் யோசி. சாயந்திரமா கூப்பிடறேன்” என்று வைத்துவிட்டான்.

எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை.

உங்களுக்கும் இதேபோன்ற நண்பர்கள் இருக்கக் கூடும். எந்த பிரதிபலனும் இல்லாமல், எதிர்பார்க்காமல் புரிந்துணர்வோடு உங்களோடு அவர்கள் இருக்கக்கூடும். பார்த்துக் கொள்வதில்லை, பேசிக் கொள்வதில்லை என்பதையெல்லாம் மீறிய அந்த நட்பு, எப்போதாவது பார்த்தாலும் பேசினாலும் ஈரம் காயாமலே இருக்கும். உறவுகளிலேயே அந்த சக்தி நட்புக்கு மட்டும்தான் உண்டு!

ஐ லவ் யூ ஸஸி!

Monday, July 6, 2009

அ-

திகாலை ஆறுமணிக்கு பனி அதிகமாகத் தெரிந்தது. பால்கனியிலிருந்து பார்க்க அங்கங்கே மரங்களிடையே ஒளிந்துகொண்டிருக்கும் கட்டிடங்கள் அழகாகத் தெரிந்தது. இன்னும் கொஞ்ச காலப்போக்கில் மரங்கள் குறைந்து கட்டங்கள் அதிகரிக்கும். நாம் தண்ணீரை பிளாஸ்டிக் போத்தல்களில் நிரப்பிக் குடித்துக் கொண்டே அதை ரசித்துக் கொண்டிருப்போம். தண்ணீருக்கு பதில் கோக் அல்லது வேறேதாவது...

லுவலகத்தில் எல்லாருமாக ‘நாடோடிகள்’ பார்க்கலாம் என்று முடிவானது. போய்ப் பார்த்துவிட்டு வந்தோம். தினசரிகளில் ‘இளம்ஜோடி தஞ்சம்’ என்ற பத்திக்குப் பின் இருக்கும் பல இளைஞர்களின் பங்களிப்பின் வலியைச் சொல்லியிருக்கும் படம். சபாஷ்! ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக அலுவலக மதிய உணவு அறை சூடாகிக் கொண்டிருக்கிறது இந்தப் படம் குறித்த விமர்சன விவாதங்களால். 'அம்மா அப்பாவைவிட உயர்ந்தது நட்புங்கறீங்க. ஆனா அப்பா அம்மா 'உனக்காக நான் கஷ்டப்பட்ட்து வீணாப்போச்சே'ன்னு வந்து சண்டை போடறாங்களா என்ன? அதுவுமில்லாம ஒருத்தங்களுக்கு கல்யாணம் பண்ணிவெச்சதோட உங்க கடமை முடிஞ்சுது. நான் பண்ணி வெச்ச கல்யாணம் அதனால நீ அவளோ/அவனோ என்ன பண்ணினாலும் சகிச்சுகிட்டு வாழணும்ன்னு கண்டிஷன் போடறது எந்த விதத்துல நியாயம்ன்னு புரியல.. – இப்படியாகத் தொடர்ந்தது அந்த விவாதம். 'ஒரு படத்தை வெறும் மூளையோட பார்க்கத் தெரிஞ்சவன் பாக்கியவான்' என்று நான் என் நண்பர்களிடத்தில் அடிக்கடி சொல்லுவதுண்டு. அதுதான் எனக்கு தோன்றியது. இவர்களாக ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்திக் கொண்டு விவாதிப்பதைக் கேட்பதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது.

ந்தப் படம் முழுக்க முழுக்க நட்பைச் சொல்லும் படம். நட்புக்காக எதையும் தாங்குவேன், நண்பனின் நண்பனுக்காக நானும் தோள் கொடுப்பேன் என்று சொல்லும் படம். அதை காதல் படமாக பாவித்து ஒன்றிரண்டு பேர் விவாதித்தது இன்னும் வேறு கோணம்.

வர்கள் கேட்டது…

'அந்தப் படத்துல காதலைப் பத்தி என்ன சொல்றாரு இயக்குனர்? ஓடிப்போன அந்தக் காதலர்களுக்கு காதல்னா என்னான்னே தெரியல. ஹீரோவுக்கு தன்னோட காதலை காப்பாத்திக்க தெரியல. நண்பனோட காதலுக்கு உதவத் தெரிஞ்சவனுக்கு தன் காதலி தன் மீது வைத்திருக்கும் காதலைப் புரிஞ்சுக்கத் தெரியல. அப்படிப் புரிஞ்சுகிட்டிருந்தார்ன்னா சண்டை போட்டாவது தன் காதலியோட ஆசையை/ தன்னோட ஆசையை நிறைவேத்திகிட்டிருப்பாரு இல்லையா? கவர்மெண்ட் வேலை மண்ணாங்கட்டின்னு தன்னோட காதலையும் கனவாக்கிட்டாரு. அவரோட தங்கச்சியோட காதலையும் அவர் அங்கீகரிக்கக் காரணம் அவ காதலிக்கறது தன் நண்பன்கறதால மட்டும்தானே தவிர காதலுக்கு குடுத்த மரியாதை இல்லையே?' இப்படிப் போகிறது அவர்கள் வாதம். அடுத்த படத்தை காதலுக்காக எடுத்து இவர்களுக்கு பதில் தருமாறு சமுத்திரக்கனிக்குப் பரிந்துரைக்கிறேன்.

திஷா எனக்கு நேற்று முன்தினம் போட்ட பின்னூட்டம் பலவித சர்ச்சைகளைக் கிளப்பியிருப்பதாக அறிகிறேன். அது ச்சும்மா. யாரும் வருத்தப்படுமளவுக்கு சீரியஸான விஷயமில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். மீனவனின் பின்னூட்டம் பார்த்து அதிஷாவுக்கு அழைத்துச் சொன்ன பிறகு இணையம் பக்கம் வரவே இல்லை நான். நண்பர்களின் அழைப்புதான் அதுகுறித்து எனக்குத் தெரிவித்தது. அதிஷாவையோ, மீனவனையோ, மணிகண்டனையோ வேறு யாரையுமேவோ வரைமுறை மீறித் திட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. உரிமையிருப்பின் அழைத்துச் சொல்லலாம். அவ்வளவே. இருந்தாலும் கொஞ்சம் வரம்புமீறிப் போன மணிகண்டனின் பின்னூட்டத்திற்காக அதிஷாவிடம் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன். இவிங்க எப்பயுமே இப்படித்தான் பாஸூ!

ண்ணாச்சி வடகரைவேலனைப் பற்றி இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். இது முதுகு சொறிதலாக நினைத்துக் கொண்டாலும் சரி. பரஸ்பர அன்பால் பலரையும் அவர் செலுத்திக் கொண்டிருக்கிறார். நட்சத்திர வாரத்தில் தவறாமல் அவரது பதிவுகளைப் படித்தவர்களுக்கு அவரின் எழுத்தின் முன்னேற்றம் புலப்பட்டிருக்கும். கேட்டால் சாதாரணமாக ‘இது சாம்பிள்தான்’ என்கிறார். நான் சொல்லவந்தது அவர் எழுத்தைப் பற்றியல்ல. நண்பர்கள் வட்டாரத்தில் யாரால் யாருக்காவது ஏதாவது என்றால் இவரது அழைப்புதான் முதலில் போகும். ‘என்னடா பண்றீங்க.. அடங்க மாட்டீங்களா?’ என்று திட்டு வேறு விழும். யார் மீது தவறு என்ற விசாரணைக்கெல்லாம் போகாமல் அப்போதைக்கு விவகாரத்தை பெரிதாக்காமல் பிரச்சினையை முடிப்பதில் அவர் வல்லவர். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் இருவருமோ, அல்லது ஒருவரோ அடங்கிப் போய்விடுவதால் வீணான சச்சரவுகள் தவிர்க்கப்படும். அந்த வகையில் அண்ணாச்சி ஒரு குடும்பத்து பெரியவரைப் போல நடந்து கொள்வதால் எங்கள் மனசுக்குள் சிம்மாசனமிட்டிருக்கிறார். நட்சத்திர வாரத்தில் அவரைத் தொடர்வதில் பெருமை கொள்கிறேன்!

டுத்ததாக நான் கைலுக்கல்களை தெரிவிப்பது பைத்தியக்காரனுக்கு! மனுஷன் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்தாலும் அறிவித்தார். ஜூன் முப்பது வரை பதிவர்களின் உரையாடலில் ‘சிறுகதைப் போட்டிக்கு எழுதியாச்சா’ தவறாமல் இடம்பெற்ற வாக்கியமாக இருந்தது. நல்லாயிருந்தது நல்லாயில்லை என்ற எல்லைகளை மீறி கலந்து கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டேன்.

வியல் போலத் தோன்றினாலும் இது அவியல் அல்ல. வெறும் அ தான் என்பதை மீண்டுமொருமுறை (இப்பத்தானடா சொல்ற?) தெளிவு படுத்திக் கொள்கிறேன். அவியல் இரண்டொரு அல்லது இன்னொரு நாளில் வரும்.

.

Saturday, July 4, 2009

மூன்று கவிதைகள்


கன்னத்தில் கைவத்தபடி
பூனையொன்றைப் பார்த்தபடி
அமர்ந்திருந்த அந்தக் குழந்தை
அழகாயிருந்தது.

‘புதுசா குடிவந்திருக்காங்க..’
என்றாள் மனைவி
‘அந்தக் குழந்தை பேரு கூட...’
யோசிக்க ஆரம்பித்தவளிடம் சொன்னேன்..

“பேரு வேண்டாம்..
குழந்தைன்னே இருக்கட்டும்..”

******************

என் கவலைகளைப் பகிர்ந்து கொள்வதில்
எனக்கெந்தத் தயக்கமும் இல்லை.
உங்கள் கவலைகளையும்
பகிர்ந்து கொள்ளுங்களேன் என
இறைஞ்சப் போவதுமில்லை.
‘என் கவலைகள் எனக்கு
உங்களது உங்களுக்கு’ என்ற
வாசகமேதும் சொல்லப்போவதுமில்லை.
என் கவலைகள் குறையும்போது
அதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்வதில்
எனக்கு சந்தோஷம்தான்.

ஆனால் உங்கள் கவலைகளை
நீங்கள் பிறரிடம் பகிர்ந்து கொள்வதைவிட
என் கவலைகளை
பிறரிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள்
என்பதில்தான்
நமக்குள் வேறுபாடுகள் ஆரம்பிக்கிறது.


******************

‘எனக்கு நிகழ்ந்த எல்லாமும்
உங்களுக்கும் நிகழ்ந்திருக்கக்கூடும்’
என்ற வரிகளில் ஆரம்பித்த
என் அடுத்த கவிதையை
எப்படித் தொடர்வதென்ற
யோசனையில் இருக்கிறேன் நான்.
எனினும்
அந்த
அடுத்த வரி எனக்குத்
தோன்றும்போது
நீங்கள் உங்கள்
வழக்கமான வேலைகளுக்குத்
திரும்பியிருக்கக்கூடும்.
நானும்...


.